கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

🕔 February 18, 2021

கொவிட்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை பாரபட்சமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து இலங்கை அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்லிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வரவேற்பை தெரிவித்திருந்தது. எனினும் கொவிட்-19 தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொவிட்-19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் கூறியுள்ள போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை ஏமாற்றம் அளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பிரதமரின் நாடாளுமன்ற உரை தொடர்பில் கடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில; கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்லவென்றும் அந்த செயற்பாடுகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி, பிரதமர் என எவரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை கூற முடியும். எனினும் கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தொடர்ந்து தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது குறித்த இறுதி தீர்மானத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே எடுக்க வேண்டும்.

அது குறித்து ஆராய நிபுணத்துவ குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குழுவின் பரிந்துரை வெளியான பின்னரே கொவிட்19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தொடர்ந்தும் தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்படும்” எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்