அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம்

🕔 February 17, 2021

– படங்கள்: ஹாசிம் சாலிஹ் –

ட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரத்தில் குப்பை மற்றும் விலங்குக் கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகள் கொட்டப்படுவதால், ஆறும் – ஆறு சார்ந்த சூழலும் மாசடைவதோடு, பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் – குப்பைகளைக் கொட்டுவதற்கான பாரிய இடமொன்று அஷ்ரப் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இயற்கையின் பெரும் கொடையான ஆற்றினை அசுத்தப்படுத்தும் வகையில், அதன் ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகரில் அமைந்துள்ள குப்பை கொட்டுமிடத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி மன்ற பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

அந்த வகையில் நாளொன்றுக்கு 125 தொடக்கம் 150 டொன் வரையிலான குப்பைகள், அட்டாளைச்சேனை – அஷ்ரப் நகரில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.

இதேவேளை, இங்கு குப்பைகளைக் கொட்டும் உள்ளுராட்சி சபைகள், அற்காக – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பணமும் வழங்குகின்றது. அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் இதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை வருமானமாகப் பெறுகின்றது.

இவ்வாறான பின்னணியில், அட்டாளைச்சேனையில் உள்ள சிலர், குப்பைகளையும் கழிவுகளையும் உரிய இடத்துக்கு அனுப்பி வைக்காமல், அவற்றினை கோணாவத்தை ஆற்றின் கரைகளில் இவ்வாறு கொட்டுவது மிகவும் மோசமான செயற்பாடாகும்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு சுமார் நாலரை கிலோமீற்றர் நீளமும், சுமார் 350 மீற்றர் அகலமும் கொண்டதாகும்.

பல்லாயிரக் கணக்கான நெல்வயல்களில் தேங்கும் மேலதிக நீரை கடலுடன் கொண்டு சேர்ப்பதற்கான வடிகாலாகவும் இந்த ஆறு உள்ளதோடு, பல நூற்றுக்கணக்கானோர் நன்நீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இடமாகவும் உள்ளது.

ஆயினும் கடந்த பல வருடங்களாக இந்த ஆற்றின் கரையோரங்களை மண்ணிட்டு நிரப்பியுள்ள பலர், அந்த இடங்களை சட்ட விரோதமான வகையில் கையகப்படுத்தியுள்ளனர். இதனால், இந்த ஆற்றின் அகலம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, தற்போது ஆற்றினை மென்மேலும் அசுத்தப்படுத்தும் வகையில் இவ்வாறு குப்பைகளும் கழிவுகளும் அங்கு கொட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விடயம் குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை, கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் உள்ளிட்ட நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

Comments