பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ரஹீம் தெரிவு; வியூகம் அமைத்தார் முஷாரப்: ஆட்சியை இழந்தது முஸ்லிம் காங்கிரஸ்

🕔 February 12, 2021

– மப்றூக் –

பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம்.எச். ரஹீம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டார்.

பொத்துவில் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மீண்டும் அந்த திட்டத்தை உரிய காலப் பகுதிக்குள் திருத்தத்துடன் சமர்ப்பிக்கத் தவறியைமையை அடுத்து, அந்தச் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான தவிசாளர் எம்.எஸ். வாசித், தனது பதவியை இழந்தார்.

இந்த நிலையில் குறித்த சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை, பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம். மணிவண்ணன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் பதவிக்கு – முன்னைய தவிசாளர் எம்.எஸ். வாசித் மற்றும் அச்சயைின் உறுப்பினர் எம்.எச். ரஹீம் ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

இதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 உறுப்பினர்களில் 13 பேர் ரஹீமுக்கு ஆதரவாகவும் 08 உறுப்பினர்கள் முன்னாள் தவிசாளர் வாசித்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

ரஹீமுக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த 04 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 02 உறுப்பினர்களும், ஜே.வி.பி உறுப்பினர் ஒருவரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தலா ஒருவரும் வாக்களித்திருந்தனர்.

இதனடிப்படையில் பொத்துவில் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம்.எச். ரஹீம் தெரிவு செய்யப்பட்டதாக, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

பின்னணி என்ன?

பொத்துவில் பிரதேச சபை தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ் வாசித் பதவி வகித்து வந்தார். ஏனைய கட்சி உறுப்பினர்கள் சிலரின் ஆதவுடனேயே அவர் தவிசாளர் பதவியைப் பெற்றார்.

இந்த நிலையில், தவிசாளர் பதவியின் அரைவாசிக் காலப்பகுதியை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எச். ரஹீமுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்பாக வாசித் இந்த வாக்குறுதியை வழங்கியதாக ரஹீம் தெரிவித்து வந்தார்.

ஆனாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக, அரைவாசிக் காலத்தின் பிறகு வாசித் தனது தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்து, ரஹீமுக்கு வழங்கவில்லை. இது தொடர்பில் ரஹீமுக்கு மு.காங்கிரஸ் தலைவரும் நியாயம் பெற்றுக் கொடுக்கவில்லை.

நாடாளுமுன்ற உறுப்பினர் முஷாரப் வியூகம்

இந்த நிலையில்தான் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் – பொத்துவில் பிரதேச சபைக்கு தனது பங்களிப்புடன் தவிசாளர் ஒருவரை தேர்வு செய்யும் வியூகமொன்றை அமைத்தார்.

எனவே, பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக, சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதங்களை தன்னுடன் ஒன்றுபடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் அண்மையில் பகிரங்க வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார்.

இதற்கமைய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரஹீம் உள்ளிட்ட பலர், முஷாரபுடன் சில நாட்களுக்கு முன்னர் இணைந்து கொண்டனர்.

இந்தப் பின்னணியிலேயே, இன்று நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரபின் பங்களிப்புடன் ரஹீம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

“மக்கள் காங்கிரஸில் இணைந்து விட்டேன்”

புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று முதல் இணைந்து கொண்டதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை தவிசாளராக தன்னை வெற்றிபெறச் செய்வதற்கு வாக்களித்த உறுப்பினர்கள், அதற்கு காரணமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோருக்கு ஊடகவியலாளர் சந்திப்பின் போது நன்றி கூறிய புதிய தவிசாளர் ரஹீம்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனுக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: கள்ள வாக்குறுதி வழங்கினார் தவிசாளர் வாசித்: பொத்துவில் பிரதேச சபை ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களித்த மு.கா. உறுப்பினர் ரஹீம் விளக்கம்

Comments