உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியா வலியுத்தல்

🕔 February 1, 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி வழங்கி, ஒரு சில மணித்தியாலங்களில் இலங்கைக்கான இந்திய தூதரகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று அரசாங்கங்களிடையே 2019 மே 28 செவ்வாய்க்கிழமை கொழும்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

2019ம் ஆண்டு மே மாதம் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்ட முத்தரப்பு உடன்படிக்கையை இந்த மூன்று நாடுகளின் ஒத்துழைப்புடன் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பினை நான் மீள வலியுறுத்தவிரும்புகின்றேன்” என இந்திய தூதரக பேச்சாளர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவது என, இலங்கை அமைச்சரவை மூன்று மாதத்திற்கு முன்னர் தீர்மானித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்