யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

🕔 November 10, 2015

Aeticle - 38
டபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.

இக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடபுல முஸ்லிம்களை புலிகள் சொந்த மண்ணைவிட்டு விரட்டியமை ஜனநாயக விரோத செயல்” என்றும், “எழுபத்தையாயிரம் பேரையும் முற்றாக வெளியேற்றியமை ஓர் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை” என்றும் குறிப்பிட்டார்.

உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளிக்கும் பிரபலமான ஒரு தமிழ்த் தலைவரான சுமந்திரன் அவ்வாறு குறிப்பிட்டமையையிட்டு, இருபத்தைந்து ஆண்டுகள் இன்னல் வாழ்வை அனுபவிக்கும் வடபுல முஸ்லிம்கள் பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். சுமந்திரனின் உண்மைக் கருத்துக்கு வடபுல முஸ்லிம் சமூகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

சுமந்திரன் சுதந்திரமாக, அவரின் கருத்தை வெளியிட்டமையை மறுத்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள், வடபுல முஸ்லிம்களின் இதயத்தை புண்பட வைத்துள்ளன. யுத்தக் கெடுபிடியிலிருந்து முஸ்லிம்களை பாதுகாக்கவே, அவர்களை புலிகள் விரட்டினார்கள் என்று, அப்பட்டமான பொய்யை அரியநேத்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

முஸ்லிம்களின் பாதுகாப்பைப் புலிகள் கருத்தில் கொண்டிருப்பனரா, இல்லையா என்பதை பின்வரும் சம்பவங்கள் வெளிப்படுத்தும்.

  • இடப்பெயர்வுக்கு முன்னர் யாழ். மாவட்டத்திலுள்ள 55 தனவந்தர்களும் வியாபாரிகளும் புலிகளால் கடத்தப்பட்டு, சிறைவைக்கப்பட்டனர். சித்திரவதைக்குள்ளான அவர்களிடமிருந்து வங்கிப் பணமும் வீட்டிலுள்ள பணமும் நகைகளும் பறிக்கப்பட்டன.

  • வடபுல முஸ்லிம் கடைகளில் வரி அறவிடப்பட்டது. முஸ்லிம்களின் வாகனம், இழுபொறி ஆகியவற்றுக்கு வரி அறவிடப்பட்டது. உழவர்களிடமிருந்து விளைச்சலில் நெல் அறவிடப்பட்டது. அரச ஊழியர்களிடம் பணம் அறவிடப்பட்டது.

  • 1983ம் ஆண்டு தொடக்கம் 1990 ஐப்பசி வரை பொருளாதார சுரண்டல்கள் தாராளமாக இடம்பெற்றன. இத்தகைய அராஜக செயல்கள் மூலம் வடபுல முஸ்லிம்களை புலிகள் வருத்தினர்.

எனவே, பாதுகாப்புக் கருதியே முஸ்லிம்களை  புலிகள் விரட்டினர் என்ற அரியநேத்திரனின் கூற்று அப்பட்டமான பொய்யாகும்.

மேலும் 1990 ஐப்பசியில் ஒருநாள் காலக்கெடுவில், ஐந்நூறு ரூபா பணத்துடனும் உடுதுணியுடனும் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற அதிரடிப்பணிப்பு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அராஜகமாகும். வடபுல முஸ்லிம்கள் சொந்த வீடுவாசல், காணி, உழைப்பு, தோட்டம், தொழில் மற்றும் கல்வி அத்தனையும் இழந்து, நடைப்பிணமாக ஊரைவிட்டுச் சென்றனர். அந்த அக்கிரமம்தான் புலிகளின் அழிவுக்கு வித்திட்டது என்றும் கூறலாம்.

இத்தனையும் தெரிந்து கொண்டு, அரியநேத்திரன் ‘பாதுகாப்பு கதை’ பேசுவது, ‘யானையைச்சுட்டு பானையில் புதைக்க முயன்ற கதை’ யாகும். அப்பட்டமான கற்பனைகளைச் சோடித்து வெளிப்படுத்திய அரியநேத்திரன் அனுதாபத்துக்கு உரியவர். அறிவும், நிதானபுத்தியுமுள்ள யாரும் இவரின் கூற்றை ஏற்க முடியாது.

மேலும், ‘யுத்தக் கெடுபிடியியால் சொந்த இனம் அழிந்தாலும் பரவாயில்லை, முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்’ என்றுதான் புலிகள் முஸ்லிம்களை அனுப்பினார்கள் என்ற அரியநேத்திரனின் கூற்றிலுள்ள கருத்து எள்ளிநகையாட வேண்டியதாகும்.

மேலும், சுமந்திரன் தனது கருத்தைச் சுதந்திரமாக கூறும் உரிமையுடையவர். அவரை விமர்சிக்கும் ஆற்றலும் தகைமையும் அரியநேத்திரனுக்கு இல்லை. ஆனால் அரியநேத்திரன் தனது அறிவுச் சூனியம் காரணமாக, முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையை இனச்சுத்திகரிப்பு அல்ல என்று கூறலாம்.

மேலும், சென்ற தேர்தலில் கூட்டமைப்பு வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாதவர் அரியநேந்திரன். எனவே, கூட்டணி சார்பில் கருத்து தெரிவிக்கும் உரிமையும் தகைமையும் அவருக்கு இல்லை என்பதே உண்மை.

அரியநேத்திரன் கிழக்கை சேர்ந்தவர். வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் மேம்பாடுகளைப் பற்றி விரிவாக அவர் அறிந்திருக்க நியாயமில்லை. வடபுல முஸ்லிம்களுக்கு புலிகள் இழைத்த கொடுமைகள் பற்றி முழுவதுமாகத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. காரணம், புலிகளின் எல்லா அராஜகங்களும் வெளிவராதவை.

எனவே, ‘பாதுகாப்பு கருதி முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர்’ என்பது, அறிவுக்கு பொருத்தமற்றது. உண்மையான மனித நேயமுள்ளவர்கள், தம்மைப் போன்ற ஓர் இனம் வாழ்விழந்து, சுகம் இழந்து, துன்புறுவதைக்கண்டு அனுதாபப்படுவார்கள். பிழை, சரியைச் சமன் செய்து, சீர்தூக்கும் தராசு போல் செயல்பட்டு ஏற்றுக் கொள்வார்கள். அத்தகைய மனப்பாங்கு அற்றவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

‘வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை அப்பட்டமான இனச்சுத்திகரிப்பு’ என்பதை வலியுறுத்துகிறது முஸ்லிம் சமூகம்.

முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனும் முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு அல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தி, முஸ்லிம்களின் உள்ளத்தை புண்பட வைத்துள்ளார்.

சிங்கள ராணுவத்துக்கு எதிரான தமிழ்த் தேசிய போராட்டத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றம் தவிர்க்கமுடியாதது என மழுப்பும் பிரபா கணேசனினடம் ஒரு கேள்வி கேட்க முடியும். தமிழ் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் சாதாரண தமிழ் மக்களும் இறப்பது தவிர்க்க முடியாது என ராணுவம் கூறினால் பிரபா கணேசன் அக்கூற்றை ஏற்கத் தயாரா?

75 ஆயிரம் முஸ்லிமக்ளின் இயல்பு வாழ்வு மற்றும் நல்வாழ்வை சிதைத்தமையை இனச்சுத்திகரிப்பு என்று கூறாமல் வேறு எப்படி அழைப்பது.

நியாயமும் நீதியும் அனைவருக்கும் பொதுவானது. தமிழருக்கு ஒரு நீதி முஸ்லிம்களுக்கு என்று ஒரு நீதி இருக்க வேண்டும் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது.

ரணிலின் தாளத்துக்கு சுமந்திரன் ஆடுவதாகவும் பிரபா கணேசன் கூறியுள்ளார். இனச்சுத்திகரிப்புக்கும் ரணிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மொட்டைத் தலைக்கு முடிச்சுப் போட்டு, பொருந்தாத கதையளப்பதில் எந்தப் பயனும் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகாரிக்கப்பட்டவர்கள் தலைமை தாங்க எண்ணுவது வியப்புக்குரியதே.

புலிகள் இருந்திருந்தால் சுமந்திரன் இவ்வாறு பேசுவாரா என பிரபா கணேசன் கேட்கும் கேள்வி, சிறுபிள்ளைத் தனமானதாகும். பிரபாவாக இருந்தால் என்ன பிரம்மாவாக இருந்தால் என்ன? உண்மையை எடுத்துக் கூற தயக்கம் தேவையில்லை. பயந்து பேசினாலும் பயமின்றி பேசினாலும் நீதி அனைவருக்கும் பொதுவானது என்பதை பிரபா கணேசன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியம் பற்றி அடிக்கடி பேசிவரும் முன்னாள் எம்.பி. கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும் சுமந்திரனின் பேச்சை மறுதலித்து அறிக்கை விட்டிருப்பது முஸ்லிம்களை மேலும் புண் படுத்தியுள்ளது.

வடமாகாணத்தைப் பூர்வீகமாக கொண்ட, நல்ல அரசியல் பரம்பரையில் பிறந்த கஜேந்திரக்குமார் முஸ்லிம்களின் உண்மையான அவலங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அறிக்கைகள் மூலம் அரசியல் நடத்துவதைவிடுத்து, வாழ்விழந்து தவிக்கும் ஓர் இனத்தை மீண்டும் தமது சொந்த பூமியில் மீள்குடியேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்