கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல

🕔 November 10, 2020

கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை சுகாதார குழுவினருக்கு வழங்கவே அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் முதலாவதாக இறந்தவரின் உடலை தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்ற விடயம் சுகாதார தரப்பினரால் அதிக ஆராயப்பட்டது.

எமது நாட்டின் பௌதீக மற்றும் பொது காரணிகளை அடிப்படையாக கொண்டு கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இறப்பவர்களின் உடலை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுபட்ட கருத்தினை தெரிவித்தார்கள்.

இவ்விடயம் நாடாளுமன்றத்திலும், அமைச்சரவை கூட்டத்திலும் பேசப்பட்டது. இவ்வாறான நிலையில் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாரம் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை யோசனையை முன்வைத்தார்.

நடைமுறையில் உள்ள சட்டம், சுகாதார அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலை உலர்வலய பிரதேசத்தில் புதைக்க முடியுமா என்ற யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டது.

நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை கொவிட்-19 வைரஸ் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இந்த தீர்மானம் சமூகவலைத்தளங்களில் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் வெளியாகியுள்ளன” என்றார்.

தொடர்பான செய்தி: கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி

Comments