ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 October 4, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தமது அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை தான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனுடைய தம்பி ரியாஜ் பதியுதீன் – ஈஸ்டர் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ரிஷாட் பதியுதீனுக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையில் ரகசிய ஒப்பந்தம் உள்ளதா என்கிற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக, பேராயர் மெல்கம் ரஞ்சித் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதி மேற்படி விடயத்தைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது;

”நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே எனது முதன்மையானதும் முக்கியமானதுமான பொறுப்பு ஆகும்.

கடந்த காலங்களில் நடந்ததைப் போல – நினைத்த மாத்திரத்தில் எவரையும் கைது செய்யும், அல்லது தன்னிச்சையாக எவரையும் விடுவித்துவிடும் அதிகாரம் எதனையும் எந்த ஒர் அரசியல்வாதியிடமும் ஒப்படைத்துவிட நான் தயாராக இல்லை.

அத்துடன் – அரச அதிகாரிகள் எவரும், அல்லது அரச திணைக்களங்கள் எதுவும் விடும் குறைபாடுகள் அல்லது செய்யும் தவறுகளைச் சரிசெய்து சீர்படுத்தவும் நான் நடவடிக்கை எடுப்பேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் எங்கள் அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை நான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு – என் மீது நம் நாட்டு மக்கள் இதுவரை வைத்திருக்கும் நம்பிக்கையை நான் வீணாக்க மாட்டேன் என்பதனையும், மாறாக – அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவே நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்பதனையும் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்”.

தொடர்புடைய செய்தி: ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்