ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம்

🕔 October 3, 2020

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

ரயாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களம், றியாஜ் பதியூதீனை கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கைது செய்தது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன; கைதான ரியாஜ் பதியூதீன் – ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் சுமார் 05 மாத காலமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த தமது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

பின்னர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்தப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பொலிஸ் பேச்சாளர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், அவர் 05 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின்போது, அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான போதுமான சாட்சியங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதனால், அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இவ்வாறானவர்களை விடுவிப்பதால் ஆளும் தரப்புக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் ரகசிய ‘டீல்’ இருக்கின்றனவா எனும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நியாயமாக இடம்பெறுமா என்ற அச்ச உணர்வு தோன்றுகிறது” என்றார்.

தொடர்பான செய்தி: குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்