கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்

🕔 August 29, 2020

– முன்ஸிப் –

ட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் தரித்து நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கும்பொருட்டு, குறித்த மாடுகளைக் கைப்பற்றும் திடீர் நடவடிக்கையொன்றினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா இன்று சனிக்கிழமை இரவு மேற்கொண்டார்.

தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் ஏராளமான மாடுகள் தரித்து நிற்பதனால், அந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதோடு, அந்த இடம் அசுத்தமடைந்தும் வருகின்றது.

எனவே, அந்த இடத்தில் தரிக்கும் மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கான நிரந்தரத் தீர்வு இதுவரை காணப்படவில்லை.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை, இவ்விவகாரம் தொடர்பில் குறித்த இடத்திலிருந்தவாறு, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லாவைத் தொடர்பு கொண்ட ‘புதிது’ செய்தித்தள ஆசிரியர், அங்கிருக்கும் மாடுகளை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து அந்த இடத்துக்கு பிரதேச சபை ஊழியர்களுடன் விரைந்த தவிசாளர், அங்கிருந்த மாடுகளை பிடித்து, அருகிலுள்ள பொது மைத்தானத்தினுள் அடைத்து, அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

தவிசாளர் அங்கு வருவதற்கு முன்னதாக, அங்கிருந்த சில மாடுகளின் உரிமையாளர்கள் வந்து – தமது மாடுகளைக் கொண்டு சென்றதாகவும் அறிய முடிகிறது.

பிரதேச சபை உறுப்பினரின் அலட்சியம்

அட்டாளைச்சேனையிலுள்ள பொது இடங்களில் கட்டாக்காலிகளாக விடப்படும் மாடுகளை பிரதேச சபையினர் கைப்பற்றும் போது, அவற்றை விடுவிப்பதற்காக, ஒரு மாட்டுக்கு 03 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் அறவிடுகின்றனர்.

ஆயினும், தண்டப்பணத்தை செலுத்தி விட்டுச் செல்லும் மாட்டு உரிமையாளர்கள், தமது மாடுகளை உரிய முறையில் பராமரிக்காமல் மீண்டும் வீதிகளில் விட்டு விடுகின்றமையைக் காண முடிகிறது.

இது இவ்வாறிருக்க, தேசிய கல்விக் கல்லூரி அமைந்திருக்கும் வட்டாரத்துக்குரிய பிரதேச சபை உறுப்பினர், இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் வீதிகளில் தரித்து நிற்பதைக் கண்டும் காணாமல் இருப்பதாக, அப் பகுதி மக்கள் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கவலை வெளியிட்டனர்.

குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினருக்கு நெருங்கிய உறவினர்களின் மாடுகளும் இவ்வாறு கட்டாக்காலிகளாக வீதிகளில் உலவுகின்றமையினால், அது குறித்து சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, வீதிகளில் மாடுகள் தரித்து நிற்பதைத் தடுக்கும் வகையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களை தினமும் கடமைக்கு அமர்த்துமாறு, இன்று சம்பவ இடத்துக்கு வருகை தந்த அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரிடம், ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரும் அங்கிருந்த பொதுமக்களும் வேண்டுகோளொன்றை முன்வைத்தனர்.

இதற்கு இணங்கம் தெரிவித்த தவிசாளர் அமானுல்லா, நாளை முதல் அதனை அமுல்படுத்துவதாக உறுதியளித்திருந்தார்.

வீதிகளில் கட்டாக்காலிகளாக உலவும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்களும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்: மாடுகள் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்டவை)

Comments