தேசிய காங்கிரஸ் மேடையில் ஏற திட்டமிட்டிருந்த மு.காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்: கடைசி நேரத்தில் தடுத்த ஹக்கீம்: அட்டாளைச்சேனையில் குழப்பம்

🕔 July 19, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், நேற்று சனிக்கிழமை இரவு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்ட மேடையில் ஏறுவதற்கு தயாராக இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடுக்கப்பட்டதாகவும் புதிது செய்தித்தளத்துக்கு அறியக்கிடைக்கிறது.

அந்த உறுப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரும் இணைந்து கொள்ளவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொள்ளும் பொருட்டு, மேற்படி இருவரும் – அட்டாளைச்சேனையில் அமைக்கப்பட்ட தேர்தல் பிரசார மேடையில் ஏறுவதற்குத் தயாராக இருந்த போதும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், இறுதி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியமையை அடுத்து, அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீருடன் கொண்ட அதிருப்தி காரணமாகவே, இவர்கள் இருவரும் கட்சி மாறுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இவர்கள் இருவரையும் அரசியலில் – நஸீர் தொடர்ந்தும் ஓரங்கட்டி வருவதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் தேசிய காங்கிரஸில் இணையும் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்படி நபர்கள் இருவரும் தேசிய காங்கிரஸின் தேர்தல் பிரசார மேடையில் ஏறுவதற்கு தயாராகி வருவதை அறிந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை – அந்த இருவருடனும் சமரசம் பேசியதோடு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் அவர்களுடன் பேசுவதற்கு ஒழுங்கு செய்தார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் தேசிய காங்கிரஸ் மேடையில் ஏறும் திட்டம், கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும், இன்னும் சில நாட்களில் தேசிய காங்கிரஸுடன் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் சிலர், இணைந்து கொள்ளலாம் என உள்ளுர் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்