வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு
🕔 October 30, 2015


– ஜம்சாத் இக்பால் –
வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, அதன் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்து, அதனூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த கருத்தரங்கை ஆங்கிலத்தில் நடத்தியதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.
இக் கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்; முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகள் இழைத்த அநியாயங்கயும், உரிமை மீறல்களையும் சுட்டிகாட்டினார்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர;
வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக, முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் தற்போதைய தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உரத்துக் குரல் கொடுத்ததாகக் கூறினார்.
மேலும், அளுத்கம விவகாரம் போன்றவற்றின் போதும், அமைச்சர் ஹக்கீம் குரலெழுப்பியதையும் நினைவுபடுத்தினார்.
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்காக, தாம் வெட்கித் தலைகுனிவதாக தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமதிரன் தமது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே தமிழ் மக்களுக்கும் எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன்,கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் செல்வகுமாரன் ஆகியோரும் இக்கருத்தரங்கில் பங்குபற்றி உரையாற்றினர்.
கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸனலி, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எம். மஸ்தான், டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்தலிப் பாவா பாறூக், எம்.எஸ்.எம். அஸ்லம், ஹுனைஸ் பாறூக் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பலர் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Comments

