கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

🕔 March 31, 2020

– மப்றூக் –

கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும், பலாத்தகாரமாக அவ்வாறான உடல்கள் எரிக்கப்பட மாட்டாது எனவும் பொலநறுவை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் டி.டில். வைத்தியரத்ன சில நாட்களுக்கு முன்னர் ‘புதிது’ செய்தியாளர் றிசாத் ஏ காதரிடம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் கொரோனாவினால் மரணம் நிகழ்ந்தால், அந்த உடல்களை அடக்கம் செய்யும் நடைமுறை பற்றி, வினவியபோதே, டொக்டர் வைத்தியரத்ன மேற்படி விடயத்தைக் கூறினார்.

சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் வைத்தியரத்னவிடம் ‘புதிது’ செய்தியாளர் றிசாத் இந்த விடயங்களைக் கேட்ட தருணத்தில், இலங்கையில் அப்போது கொரோனாவினால் யாரும் மரணித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடலை எரிப்பதே சிறந்தாகும். ஆனால், முஸ்லிம் கிறிஸ்தவ சமயத்தவர்களின் உடல்களை அவர்கள் எரிப்பதில்லை என்பதால் புதைப்பதற்கு அனுமதிக்கப்படும்” என்றும் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியரத்ன கூறியிருந்தார்.

இதேவேளை, கொவிட் 19 எனும் கொரோனா தாக்கம் காரணமாக இறந்தவர்களின் உடலை தொற்றுப் பரவாமல் கையாள்வது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டல் குறிப்பில்; அவ்வாறான உடல்களை அடக்கம் செய்யலாம் அல்லது எரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

மேற்படி முஸ்லிம் நபரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்ட வேளை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சமூகமளித்திருந்தனர்.

கொரோனா தொற்றினால் மரணமடைந்தவரின் உடலுக்கான இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள, அவரின் உறவினர்கள் இருவருக்கு அனுமதியளிக்கப்படும்.

எவ்வாறாயினும் நேற்று முஸ்லிம் நபரின் உடல் தகனம் செய்யப்பட்ட போது, அவரின் உறவினர்கள் எவரும் வருகை தந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டிக் குறிப்பு
பேஸ்புக் இல் வெளியிடப்பட்டுள்ள கண்டனங்கள்

Comments