‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

🕔 March 6, 2020

– நூருல் ஹுதா உமர் –

“ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று, மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய அறிவுரையை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

“ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாமல் இருந்திருக்கிறோம். கடைசியாக ரணிலின் ஆட்சியில் கல்முனையை பறிகொடுக்க பார்த்தோம், காணிகளை பறிகொடுக்கப் பார்த்தோம்” எனவும் அவர் கூறினார்.

பொத்துவிலில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே ஹரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“கடந்த காலங்களில் நாங்கள் சட்டபூர்வமற்ற பயங்கரவாத அமைப்புகளையே சந்தித்தோம். அவர்களை அழிக்க கூடியதாக இருந்தது. இப்போது அழிந்தும் விட்டார்கள். ஆனால் இப்போது நாங்கள் போராடப்போவது – மக்களால் சட்டப்படி தெரிவுசெய்யப்பட்டு சர்வதேசம் அங்கீகரித்த அரசாங்கத்துடன்.

அவர்களுடன் போராடி நமது உரிமைகளை பெற வேண்டுமாக இருந்தால் பலமான அரசியல் சக்தியாக நாங்கள் மாற வேண்டும்.

எம்முடைய மார்க்கத்துக்கும் எம்முடைய முஸ்லிம் உம்மத்துக்கும் பிரச்சினைகள் வரும்போது, அதை தட்டிக்கேட்கும் வல்லமை உள்ள மக்கள் சக்தி கொண்ட ஒரே கட்சி நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான்.

கடந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் எமது சமூகத்தை பாதுகாக்க எல்லோரும் ஒன்றிணையுங்கள் என அழைப்பு விடுத்தேன். அவ்வாறு ஒற்றுமைப்படுவதளுனூடாக அம்பாறை மாவட்டத்தில் நான்கும், தேசிய ரீதியாக 25 நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களையும் பெற முடியும்.

இவர்களை ஒற்றுமைப்படுத்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவரிடமும் பேசியிருக்கிறோம். முஸ்லிம் காங்கிரசின் தலைமை எங்களை விட்டு பிரிந்துசென்ற முன்னாள் செயலளார் நாயகம் எம்.டரி. ஹஸனலியை அழைத்து, எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருக்கிறோம். இதுசம்பந்தமாக ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களிடம் பேசுங்கள் என செய்தி சொல்லியுள்ளார்.

சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் எமது சமூகத்தின் கப்பல் மூழ்கப்போகும் தருணத்திலும் தனது கட்சி, தனது ஆதரவாளன் என சிந்திப்பவன் தலைவனாக முடியாது. தைரியமாக முடிவெடுப்பவன் தான் தலைவன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஆபத்து தெளிவாக தெரிகிறது. அதை நாம் ராஜதந்திரமாக அணுக வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் போது முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வையும், முன்னாள் அமைச்சர் றிசாத்தையும் பயங்கரவாதி என்றார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரையும், முஸ்லிம் காங்கிரசின் எம்.பிக்களையும் நடுநிலையான அரசியல்வாதிகளாக சிங்கள சமூகம் ஏற்றுக்கொண்டது. இதுதான் சிங்கள சமூகம் எங்கள் மீது வைத்திருக்கும் நன்மதிப்பு.

கல்முனை துண்டாட கூட்டம் நடைபெற்ற போது கருணா, வியாழேந்திரன், ஸ்ரீயாணி, விமலவீர போன்ற எல்லோரும் ஒன்றிணைந்து கல்முனை மக்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள், மட்டுமின்றி அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் உங்களுக்கு எதிராக நின்றபோது நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என மஹிந்தவிடம் வாதிட்டனர். நாங்கள் துணிந்து நின்று அந்த செயலக விவகாரம் தொடர்பிலான நியாயத்தை எடுத்து கூறியபோது, எங்களின் நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்த ஏற்றுக்கொண்டார்.

நாங்கள் மிதவாதமாக செயற்படுபவர்கள் என்பதனால் எங்களுடைய கோரிக்கைகளை அவர்கள் ஏற்று கொள்கிறார்கள்.

பொத்துவில் மண்ணின் பாதுகாப்பு என்பது முஸ்லிம் காங்கிரசின் கையிலையே இருக்கிறது. இது சிறுபிள்ளைகள் குஞ்சு சோறு ஆக்கி விளையாடும் காலமில்லை. மண்மலையில் பிரச்சினை வந்தபோது பாதயாத்திரை வந்தவர்களால் இந்த மண்ணுக்கு ஆபத்து என்பதை அறிந்து பாதுகாப்பு தரப்புடன் பேசி பாதுகாப்பை பலப்படுத்தி தன்னந்தனியாக நின்று போராடி பொத்துவில் தவிசாளர் வாஸித் வெற்றிபெற்றார்.

பொத்துவில் சந்தியில் சிலைகளை நிறுவி பொத்துவிலை பௌத்த நகரமாக காட்ட மேற்கொண்ட சதிகளை தனது அதிகாரத்தை கொண்டு தடுத்தவர் பொத்துவில் தவிசாளர் வாஸித். அப்போது றிசாத் பதியுதீனும், மக்கள் காங்கிரசும் களத்தில் வந்து மக்களுக்காக பேசவில்லை.

பொத்துவில் மக்களின் காணிப்பிரச்சினை எங்களுடைய தவறு அல்ல. முதுகெலும்பு இல்லாத கடந்த ஆட்சியின் காலத்தில் குறிப்பாக ரணிலின் தவறு. சிறிய விடயமாக இருந்த கல்வி வலய உருவாக்கத்தில் கூட சம்பந்தனின் அனுமதி பெறப்பட வேண்டும் எனும் நிலை இருந்தது.

ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிய ‘வொஸயத்’தை (அறிவுரைய) நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம். ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாமல் இருந்திருக்கிறோம். கடைசியாக ரணிலின் ஆட்சியில் கல்முனையை பறிகொடுக்க பார்த்தோம், காணிகளை பறிகொடுக்கப் பார்த்தோம், அந்த அரசாங்கத்தில் நடந்தவற்றை தலைவர் ஹக்கீம் பொத்துவிலுக்கு வரும்போது தெளிவாக உங்களுக்கு விளக்குவார்.

பூகோள அரசியலில் பொத்துவில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க யார் பொருத்தமானவர் என்பதை இளம் தலைமுறையினர் மட்டுமன்றி இங்குள்ள பெரியோர்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்.

முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் என்ற அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நான் இதய சுத்தியாக கரிசனையுடன் கையாண்டு வருகிறேன். மக்களை ஏமாற்றாமல் அரசியல் செய்து வருகிறோம். பொத்துவில் மக்களின் பிரதிநிதியாக பொத்துவில் தவிசாளர் வாஸித் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும் என கட்சிக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்றார்.

Comments