ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம்

🕔 March 5, 2020

– முன்ஸிப் அஹமட் –

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மு.கா. தலைவரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேரசிரியர் ஏ.எம். இஷாக் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது மு.காங்கிரஸின் முன்னாள் செயலாளரான ஹசனலியை மீண்டும் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு, மு.கா. தலைவர் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்காக மு.காங்கிரஸின் யாப்பில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்குத் தான் தயாராக உள்ளதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஹசனலி, தான் தற்போது செயலாளராகப் பதவி வகிக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பில் மு.கா.வுடன் பேசுவதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து – எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை இதன்போது ஹசனலி வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனக்கும் விருப்பம் உள்ள போதும், அதனைச் செயற்படுத்துவதற்கு காலம் போதாது என்றும், இதனை யார் ஆரம்பிப்பது என்கிற பிரச்சினை உள்ளது என்றும் இதன்போது ஹக்கீம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஹசனலியை முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைப்பதற்கான இந்த சந்திப்பு வெற்றியளிக்கவில்லை எனத் தெரிய வருகிறது.

ஹக்கீமின் அபாண்டம்

மு.காங்கிரஸின் செயலாளராக ஹசன் அலி இருந்த போது, அவர் தன்னிடம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக, மு.கா. தலைவர் ஹக்கீம் கட்சிக்குள் கூறி வந்தார்.

மேலும் ஹசனலி வகித்து வந்த செயலாளர் பதவியையும் சூழ்ச்சிகரமாக ஹக்கீம் பறித்தெடுத்தார்.

ஒரு கட்டத்தில் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக, இரண்டு ரக்அத் தொழுது, ஹசனலியிடம் சத்தியம் செய்த ஹக்கீம், அந்த வாக்குறுதியையும் மீறினார்.

இதனையடுத்து மு.காங்கிரஸிலிருந்து ஹசனலி வெளியேறி, மு.காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் உடன் இணைந்து ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பை உருவாக்கினார்.

வெள்ளையடித்தல்

இந்த நிலையில், கடந்த வாரம் கண்டி – பொல்கொல்ல பிரதேசத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; “மு.காங்கிரஸிருந்து ஹசனலி பிரிந்து சென்றதனால் அதிகம் கவலைப்பட்டது நான்தான்” என்று கூறியதோடு, “கட்சியில் இருக்கும் வரை ஹசனலி விசுவாசமாகவே இருந்தார்” என்றும் தெரிவித்து, தனது கடந்த கால அபாண்டங்களுக்கு தானே வெள்ளையடித்தார்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற ஹசனலி போன்றோர், மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும், இதன்போது ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

பெறுமானமிழந்துள்ள மு.காங்கிரஸ்

முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக பசீர் சேகுதாவூத்தும், செயலாளராக ஹசனலியும் இருந்தபோது, அந்தக் கட்சிக்கு என்று ஒரு பெறுமானம் இருந்தது. மட்டுமன்றி, அப்போது அந்தக் கட்சியை நடத்திச் செல்வது ஹக்கீமுக்கு சுலபமாகவும் இருந்தது.

பசீர் மற்றும் ஹசனலி போன்றோரின் கெட்டித்தனமும் அனுபவங்களும் முஸ்லிம் காங்கிரஸுக்கு பெரும் சக்தியாக இருந்தது.

ஆனால், மேற்படி இருவரும் அந்தக் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றதன் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் – பெறுமானம் இழந்தது. பசீர் மற்றும் ஹசனலி போன்றவர்களின்றி மு.காங்கிரஸை நடத்திச் செல்வதிலுள்ள கஷ்டத்தை ஹக்கீம் உணரத் தொடங்கினார்.

ஆனாலும், அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரங்களை வைத்து கட்சியை நடத்திய ஹக்கீமுக்கு, தற்போது எதிரணியில் இருந்து கொண்டு, கட்சியை தனியாக நடத்த முடியாததொரு நிலைவரம் ஏற்பட்டுள்ளது.

அதனாலேயே, ஹசனலி போன்றோரை மீண்டும் கட்சிக்குள் எடுப்பதற்கு ஹக்கீம் முயற்சித்து வருகின்றார் என அறிய முடிகிறது.

Comments