பிரித்தானிய குப்பைகளைத் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி உத்தரவு

🕔 July 25, 2019

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய 130 கொள்கலன்களையும் திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்;

“பிரித்தானியாவில் இருந்து 2017ம் ஆண்டில் இருந்து 2487 மெற்றிக்தொன் கழிவுகள் 12 தடவைகளில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இவை 130 கொள்கலன்களில் அடைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதனைக் கொண்டு வந்தோர் தொடர்பாக இதுவரை சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

2013.07.11ம் திகதி நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கிணங்க நாட்டிற்குள் எதனையும் கொண்டுவரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியில் அப்போதைய நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ஸவே கையொப்பமிட்டுள்ளார்.

இது நாட்டின் கைத்தொழில் துறையை பாதிப்படையச் செய்வதுடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு இந்த வர்த்தமானி வழிவகுத்துள்ளது” எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

Comments