போர் நடந்தால் ஈரான் மொத்தமாக அழிந்து விடும்: அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், ஈரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஈரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்” என்று டிரம்ப் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து ஈரானை ஒன்றும் செய்ய முடியாது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில் வளைகுடா பகுதியில் கூடுதல் போர்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப்; “ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க விடமாட்டோம். ஆனால், அந்நாட்டுடன் எந்த சண்டையையும் விரும்பவில்லை” என தெரிவித்திருந்தார்.
“எனக்கு போர் செய்ய எந்த விருப்பமும் இல்லை. ஏனெனில் போர் பொருளாதாரங்களை பாதிக்கும். முக்கியமாக மக்களை போர் கொல்லும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றங்களை தணிக்கும் விதமாக ஈரானும் சற்று இறங்கி வந்தது. அமெரிக்காவுடன் போர் நடத்தும் எண்ணம் இல்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டிரம்பின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள சாரிஃப்; “அலெக்சாண்டர், செங்கிஸ்கான் போன்ற மற்ற படையெடுப்பாளர்கள் செய்ய முடியாததை டிரம்ப் செய்ய முடியும் என்று நினைக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏன் இந்த பதற்றம்
2015ஆம் ஆண்டு சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை கைவிட்டு, அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை மீண்டும் தயாரிக்கப் போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்தது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தினால், அந்நாட்டின் மீதான தடைகள் நீக்கப்படும் என்ற இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகிக்கொண்டது.
ஒப்பந்தத்தில் குறைபாடுள்ளதாகக் கூறி இதிலிருந்து விலகிய டிரம்ப், மீண்டும் ஈரான் மீது தடைகளை விதித்தார்.
வளைகுடாவில் என்ன நடக்கிறது
பக்தாதில் அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரங்கள் இருக்கும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராக்கெட் ஏவப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்தது.
அந்த ராக்கெட், அமெரிக்க தூதரகம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் எந்த உயிர் சேதமும் இல்லை என்றாலும், இத்தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளார் என்பது என்று தெளிவாக தெரியவில்லை.
எனினும், இதுபோன்ற ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு ஈரான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ராக்கெட் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகுதான் டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.
சமீபத்தில் யூஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் போர் விமானத்தை அங்கு நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா, மத்திய கிழக்கில் 1,20,000 துருப்புகளை அனுப்ப திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ராஜதந்திர அதிகாரிகள் அனைவரையும் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.