அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை

🕔 October 7, 2015

Uthumalebbe - 01ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்திற்கான திட்டத்தின் கீழ் (TSEP/2015) ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் ரூபா நிதி, இறுதி நேரத்தில் வேறு மாவட்ட பாடசாலையொன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு, குறித்து நிதியினை உரிய பாடசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தாண்டாயுதபாணியிடம், உறுப்பினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுத பாணிக்கு, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் இணைந்து, பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிக்கும் திட்டத்தினை, 2015ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில், கிழக்கு மாகாணத்திலுள்ள திருமலை கல்வி வலயம், திருமலை தெற்கு கல்வி வலயம், மூதூர் கல்வி வலயம், கிண்ணியா கல்வி வலயம், மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு வடக்கு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம், பாண்டிருப்பு கல்வி வலயம், கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயம், அக்கறைப்பற்று கல்வி வலயம்;, திருக்கோவில் கல்வி வலயம், அம்பாறை கல்வி வலயம், மகாஓயா கல்வி வலயம் மற்றும் தெஹியத்த கண்டி கல்வி வலயம் ஆகியவற்றிலுள்ள பாடசாலைகளில் மேற்படி வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பொத்துவில் அல் – இஸ்றக் வித்தியாலயம், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று முகம்மதியா ஜூனியர் கல்லூரி, அக்கரைப்பற்று ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில் வகுப்பறைக் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் முதலாம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிட நிர்மாணிப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட நிதியான 06 மில்லியன் ரூபாய் நிறுத்தப்பட்டு, வேறு மாவட்ட பாடசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டிடக் குறைபாடுகள் நீண்ட காலமாக நிலவி வருகின்றது. மழை காலங்களில் இப்பாடசாலையில் அமைந்துள்ள 02 பழைய வகுப்பறைக் கட்டிடங்களில் நீர் ஒழுகுவதால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனைக் கருத்திற் கொண்ட இப்பிரதேச மக்களும், இப்பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் பல ஆண்டுகாலமாக இப் பாடசாலைக்கு புதிய வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணித்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இவர்களின் நியாயமான வேண்டுகோளை ஏற்று, சென்ற 2014 ஆம் ஆண்டில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு 05 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வகுப்பறைக் கட்டிடம் அமைக்கும் முதலாம் கட்ட பணிகள் ஆரம்பமாகின. இதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் இப்பாடசாலையின் வகுப்பறைக் கட்டிட நிர்மாணத்துக்கான இரண்டாம் கட்ட நிதியொதுக்கீடாக 06 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சினாலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சினாலும் இத் திட்டத்திற்கான சிபாரிசும் அனுமதியும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளிலும் வகுப்பறைக் கட்டிடங்கள் அமைப்பதற்கான வேலை ஒப்பந்தங்கள் கோரப்பட்டு இப்பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் ரூபாய் நிதியினை, வேறு மாவட்ட பாடசாலைக்கு வழங்கியமை தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, அறபா வித்தியாலயத்துக்கு ஒதுக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடாத்தப்பட்டாலும, இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறித்து தங்களுக்கு மிக மன வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

கல்வித் துறையில் நீண்டகால அனுபவங்களை பெற்ற தாங்கள் கல்வி அமைச்சராக பதவி ஏற்றவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். உங்களுக்கு கல்வி அமைச்சு கிடைப்பதற்கு எங்களின் பங்களிப்பு எப்படி அமைந்தது என்பதனை நீங்கள் அறிவீர்கள். கல்வியில் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாமல் கல்வி அமைச்சை வழி நடாத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆயினும், அண்மைக்காலமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சில நடவடிக்கைகளால் நல்லாட்சி என்ற பெயருக்கே கலங்கம் ஏற்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுக்கப்பட்ட இன உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூகங்களுக்கிடையில் விரிசல்களும், சந்தேகங்களும் ஏற்படும் நிலமை உருவாகி வருகின்றது என்பதனை மிக மனவேதனையுடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த 22 செப்டம்பர் 2015 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வின் போது, ஆளும் கட்சியினால் குறைநிரப்பு நிதிக்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது, நாங்கள் எல்லோரும் ஒன்றினைந்து ஆதரித்து வாக்களித்தோம் என்பதனை, தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

கடந்த மாகாண சபை ஆட்சிக்காலத்தில் விசேட திட்டங்களுக்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகள் – மாவட்ட மட்டத்திலும், வலய மட்டத்திலும் வழங்கப்பட்டன. ஒரு போதும் இறுதி நேரத்தில் மாவட்ட மட்டத்திற்கும், வலய மட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு எல்லோரும் ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற இக் கால கட்டத்தில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய நிதியினை வேறு மாவட்டத்திற்கு மாற்றியிருக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க விடயமாகும்.

எனவே, ஏற்கனவே கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்திற்கான (TSEP/2015) திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு, வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருந்த இறுதிச் சந்தர்ப்பத்தில், இக் கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடம் அமைப்பதற்கான நிதி மாற்றப்பட்டமை தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இக் கோரிக்கையை தங்களிடம் விடுக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்