பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடைய செயலாளரை் ஒருவின் திருட்டுப் போன தொலைபேசியை, யாழ்ப்பாண நகரத்திலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவரின் பெண் செயலாளரும் அங்கு சென்றிருந்தார். அதன்போது அவரின் கைத்தொலைபேசி அங்கு களவு போயிருந்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், யாழ்ப்பாணம் நகரிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து களவுபோன கைத்தொலைபேசி நேற்று மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரியாலையைச் சேர்ந்த ஒருவர், குறித்த தொலைபேசியை விற்பனை செய்திருந்தமை இதன்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் சந்தேகநபர் இதுவரை கைதாகவில்லை.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவான வீடியோக்களை வைத்து, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.