பறி போவதற்கு முன் பதவி துறக்கிறார், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்: அதாஉல்லா, உதுமாலெப்பை பகையின் உச்சம்

🕔 December 27, 2018

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எம்.எஸ். ஜவ்பர், எதிர்வரும் பிரதேச அமர்வுடன் தனது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அடுத்த அமர்வு 16ஆம் திகதி நடைபெறலாம் என, அறிய முடிகிறது.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்ட  ஜவ்பர், அவரின் வட்டாரத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

இருந்த போதிலும், தேசிய காங்கிரசுக்கு பட்டியல் மூலம் கிடைக்கப் பெற்ற உறுப்பினர் பதவிக்கு, ஜவ்பர் நியமிக்கப்பட்டு – சபைக்குச் சென்றார்.

ஆயினும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஜவ்பருக்கு, பட்டியல் மூலம் உறுப்பினர்பதவி வழங்கியமை தொடர்பில், தேசிய காங்கிரசுக்குள் அதிருப்தி ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 06 மாதங்களுக்கு மட்டுமே உறுப்புரிமை என்கிற நிபந்தனையுடனேயே, ஜவ்பருக்கு தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அந்த சந்தர்ப்பத்தை வழங்கியதாக அப்போது பேசப்பட்டது. இது குறித்து, ‘புதிது’ செய்தித்தளமும் அப்போது செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிபந்தனையின் பிரகாரம் ஜவ்பர் தனது உறுப்பினர் பதவியை தேசிய காங்கிரசுக்கு மீள வழங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அவ்வாறில்லாது விட்டால், ஜவ்பரின் உறுப்பினர் பதவியை தேசிய காங்கிரஸ் சட்ட ரீதியாக பறித்தெடுக்க முயற்சிக்கும்.

அவ்வாறு உறுப்பினர் பதவி பறித்தெடுக்கப்படுவது அவமானம் என்பதால்தான், ஜவ்பர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.

மேலும், தேசிய காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பைக்கும், முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான அதாஉல்லாவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு, தேசிய காங்கிரசிஸிருந்து உதுமாலெப்பை கிட்டத்தட்ட பிரிந்து விட்டதால், உதுமாலெப்பையின் தம்பி ஜவ்பருக்கு, பிரதேச சபை உறுப்பினர் பதவியை தொடர்ந்து வழங்குவதற்கு அதாஉல்லா விரும்பவில்லை எனவும் அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில், அதன் பகைமைக் கட்சியான தேசிய காங்கிரஸ் உப தவிசாளர் பதவியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தே.காங்கிரசில் போட்டியிட்டு அட்டாளைச்சேனையில் தோற்றவருக்கு, 06 மாத நிபந்தனையில் உறுப்பினர் பதவி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்