மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது
🕔 September 17, 2015
– க. கிஷாந்தன் –
நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள் – பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் வில்லைகளை விற்பனை செய்து வந்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாத்திரை கொள்வனவிற்காக ஒருவரை அனுப்பி, அதன் மூலம் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கினிகத்தேன பிரதேசம் முழுவதும், இந்த போதைப்பொருள் வில்லைகளை விநியோகித்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை, நாளை வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, கினிகத்தேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.