இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்: றிசாட்

🕔 September 11, 2018

லத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்ட வரைபை உருவாக்குவது தொடர்பில், அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இரண்டு நாள் வேலைப்பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும், ஜெனீவாவின் சர்வதேச வர்த்தக அமையமும் இணைந்து ஐரோப்பிய யூனியனின் ஆதரவுடன் நடாத்திய இந்தப் பயிற்சிப்பட்டறையில், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனுர மத்தேகொட, இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகத்தின் தலைவர் பிரேன்க் ஹெஸ், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சூளாநந்த பெரேரா, ஜெனீவா சர்வதேச வர்த்தக அமையத்தின் நிபுணரான பேராசிரியர் மைக்கல் கீஸ்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஐரோப்பிய யூனியன் – இலங்கைக்கிடையிலான வரத்தகம் தொடர்பிலான உதவித் திட்டங்களுக்கு தொடர்ந்து உதவி வரும் ஐரோப்பிய சமூகத்துக்கும், அந்த வர்த்தக சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் தூதுக்குழுவினருக்கும் நான் நன்றியைத் தெரிவிக்கின்றேன். கடந்த மார்ச் மாதம் இலங்கையில் ஆரம்பமான இந்த முயற்சியின் இரண்டாவது கட்டம் 06 மாதங்களுக்கிடையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இலத்திரனியல் வர்த்தகத்தின் இந்த இரண்டாம் கட்ட முயற்சியை செயற்படுத்துவதற்காக ஐரோப்பிய யூனியன் 08 மில்லியன் யூரோக்களை நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த வருடம் மார்ச் 15 – 16 வரை நடைபெற்ற இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பான முதலாவது வேலைப்பட்டறையைத் தொடர்ந்து, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த இரண்டாவது வேலைப்பட்டறை ஆரம்பமானது.

ஜெனீவா நிபுணர் கீஸ்ட் இவ்வருடம் மே மாதம் அளவில், இது தொடர்பான முதலாவது சட்டவரைபை தயாரித்திருந்தார். இந்த சட்டவரைபில் 05 விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.     

இணைய அழைப்புக்கள் (நுகர்வோர் அனைவருக்கும் நன்மைபயக்கக் கூடிய வகையில் அமைந்திருத்தல்)

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கல்வி.

இலத்திரனியல் வணிகம் தொடர்பான விழிப்புணர்வு.

கட்டணம் செலுத்தும் முறை. ( Pay Pal முறையை நுகர்வோரிடம் அறிமுகப்படுத்தல்)

நவீன முறையிலான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் தனியுரிமை சட்டங்கள் ஆகியவை உள்ளடங்கும் வகையிலேயே இந்த சட்டவரைபு அமைந்திருந்தது.

அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது;

இலத்திரனியல் வணிகத்தில் முன் கொள்முதல், கொள்முதல் மற்றும் பிந்திய கொள்முதல் ஆகியவற்றில் நுகர்வோர்கள் ஈடுபடும் போது, இலங்கையர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இதுவரை இல்லாத நிலையே காணப்படுகின்றது. எனவேதான் இந்த வர்த்தகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதற்கு ஸ்திரமான சட்டங்களை வரையறுக்க வேண்டியுள்ளது என்றார்.

கைத்தொழில் நிபுணர்களின் தகவலின் படி, இலங்கையில் வருடாந்த உள்ளூர் இலத்திரனியல் வர்த்தகத்தின் விற்பனைப் பெறுமானம், சேவைகள் உள்ளடங்களாக கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டொலராக அதாவது, 6.4 பில்லியன் ரூபா பெறுமதியைக் கொண்டிருக்கின்றது. 2022 ஆம் ஆண்டு இதன் வளர்ச்சியானது 400 பில்லியன் அமெரிக்க டொலரை எய்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments