அளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்தோருக்கு நஷ்டஈடு; ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நாளை கிடைக்கின்றன

🕔 July 25, 2018
ளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளது.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த நஷ்டஈடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வு நாளை வியாழக்கிழமை மாலை 03 மணிக்கு தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சுகாதாரம், போசைனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது, 2014ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில்  இடம்பெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக சமர்ப்பித்திருந்தார்.

அதற்கமைய கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மூவரது குடும்பத்தினருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்தவர்கள் 12 பேருக்கு தலா 05 இலட்சம் ரூபாய் வீதமும், சிறு சொத்துக்களை இழந்தவர்கள் 84 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதமும் கடந்த மார்ச் 22ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கும் 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்;
“புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சராக நான் நியமிக்கப்பட்ட பின்னர் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பது சம்பந்தமாக அதிக கவனம் செலுத்தியிருந்தேன். அது சம்பந்தமான தகவல்களை திரட்டி நாடாளுமன்றத்தில் காராசாரமான உரையொன்றை 2017 மார்ச் 22ஆம் திகதி ஆற்றியிருந்ததுடன் அதன் பின்னர் இழப்பீடு சம்பந்தமான அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக 2017 ஒகஸ்ட் 22ஆம் திகதி சமர்ப்பித்திருந்தேன்.

கடந்த 2018 மார்ச் 22ஆம் திகதி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்ட போது, பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை.

அப்போது அவர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என நான் உறுதியளித்தேன். அதன்படி மீண்டும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அவர்களுக்கான நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

நான் எடுத்த இந்த முயற்சி வெற்றியளிக்க ஒத்துழைப்பாக இருந்த அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் சுரேஷ், ராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் சாந்தி நாவுக்கரசன், புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட சகலருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்