அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு

🕔 June 5, 2018

ட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு எனும் அமைப்பு, எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரதியொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் நிதியினைக் கொண்டு, மேற்படி வீதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற போதும், வீதி நிர்மாணத்தை மேற்கொள்வதற்கு ஒப்பந்தகாரர்களிடம் திறந்த முறையிலான விலை மனு கோரப்படவில்லை என்று, குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீதி நிர்மாண நடவடிக்கையினை யார் மேற்கொள்கின்றனர் என்பது குறித்து யாருக்கும் தெரியாது என்றும், இந்த பணியை மேற்கொள்ளும் பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையானது நிதி மற்றும் நிருவாக சட்ட மீறல் எனவும், முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி வீதி நிர்மாண நடவடிக்கைகள் தற்போது 50 வீதம் மோசடியான முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

‘பெருந்தொகையான நிதியினை இவ்வாறு சட்டவிரோதமாக பயன்படுத்தியமைக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளரும், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளருமே பொறுப்புதாரிகளாவர்.

எனவே, இது விடயத்தில் உரிய நடடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என, மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, மேற்படி வீதி நிர்மாணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அதிகாரிகள் குழுவொன்று இன்று செவ்வாய்கிழமை குறித்த வீதி வேலைகள் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்ததாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்