தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்

🕔 May 31, 2018

– அஹமட் –

க்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு கோரி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது ஆதரவாளர்கள் மூலம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது.

ஆயினும், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தயாராக இல்லை என்பதால், இந்த விடயத்தில் அவர் மூக்குடைந்து போய் விட்டதாக, மக்கள் காங்கிரஸின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழுள்ள லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவராக, சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் தனக்கு வழங்குமாறு கோரி, அவருடைய ஆதரவாளர்களை கட்சித் தலைவர் றிசாட் பதியுதீனிடம் அனுப்பி வைத்திருந்தார்.

ஏற்கனவே, லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவராக சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ள போதும், மக்கள் காங்கிரசை அம்பாறை மாவட்டத்திலோ, ஆகக்குறைந்தது தன்னுடைய சொந்த ஊரான சாய்ந்தமருதியோ வளர்ப்பதற்கு அவர் சிறிதளவும் பாடுபடவில்லை என்கிற குற்றச்சாட்டு, கட்சிக்குள் உள்ளது.

மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதியுதீனின் வகுப்புத் தோழர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் சிராஸ் மீராசாஹிப், இதுவரையில் கட்சித் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு அதிகமான தருணங்களில் தலையிடியை மட்டுமே கொடுத்து வருகின்றார் என்று, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர் ஒருவர், இது விடயமாகப் பேசுகையில் கவலை தெரிவித்தார்.

Comments