முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு

🕔 April 14, 2018

மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷ கௌரவித்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகமூட்ட விரும்புதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

“இந்த நாட்டில் இனவாதம் இன்று நேற்று வந்த ஒன்றல்ல. அதற்கு நீண்டதொரு வரலாறுண்டு. எமது ஆட்சிக் காலப்பகுதியில் இனவாதம் சற்று மேலோங்கியது. அதற்கு, நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை. எமது காலப்பகுதியில் இனவாதிகள் நின்ற வேகத்துக்கு, நாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தாலும், நாடே சுடுகாடாக மாறியிருக்கும்.

இவ்வரசாங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை, எமது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, எமது ஆட்சியின் அருமையை புரிந்துகொள்ள முடியும். தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? இந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோ தடவை ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா?

எமது ஆட்சிக்காலப்பகுதியில் மேல் மாகாண ஆளுநராக, சகலவிதமான அதிகாரங்களுடனும் அலவி மௌலானா இருந்தார். இலங்கையில் உள்ள மாகாணங்களில் – மேல் மாகாணம் மிக முக்கியமானது. அதற்கு நாம் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்திருந்தமை வைத்தே, எமது இனவாதமற்ற அரசியல் போக்கை அறிந்து கொள்ள போதுமானதாகும்.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சபைகளில், எமது உதவியுடன் எத்தனையோ முஸ்லிம்கள் – சபைத் தலைவர்களாகியுள்ளனர். பல சபைகளை பிரதானமாக சுட்டிக்காட்டலாம். ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின் பெருமளவான வாக்கை பெறுகின்ற போதும், அவர்களுக்கு எந்த விதமான கௌரவங்களை வழங்கவும் ஆர்வம் காட்டுவதில்லை.முஸ்லிம்களை வெறும் கிள்ளு கீரையாகவே, இந்த அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்