சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

🕔 April 6, 2018

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை. எனவே, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் ஜனாதிபதி எடுக்க முடியாது” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை மீறி, அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்துள்ளனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருப்பதென்றுதான் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

உண்மையில் இது பிரதமரை தோற்கடிக்கச் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பிரேரணையல்ல. சுதந்திரக் கட்சியை பிரிக்கும் எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும். எனினும் நாம் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திக்கொள்ள போவதில்லை.

ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை. எனவே, அரசாங்கத்தில் இருந்து கொண்டு பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அவ்வாறு வாக்களித்தவர்களை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றிய பின்னர் புதிய அமைச்சரவை ஒன்றை அமைப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை, நாட்டுத் தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமருமே முடிவெடுப்பார்கள். அது தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு எம்மால் முடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்