ஐ.தே.கட்சிக்குள் இருக்கும், ஆறு கறுப்பாடுகள்; தேடும் நடவடிக்கை தீவிரம்

🕔 March 31, 2018

– எம்.ஐ. முபாறக் –

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது அது தொடர்பான வேலைகளில்தான் பிரதான அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியுடன் இருக்கும் மஹிந்த அணி, இந்த பிரேரணையில் தோற்றுப்போனால், அது அவர்கள் பெற்ற தேர்தல் வெற்றியை அவமதிப்பதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதனால்தான் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களினதும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினதும் கையெழுத்தை பெற்றபின்னர்தான், பிரேரணையை சபாநாயகரிடம் ஒப்படைப்போம் என்று மஹிந்த அணியில் சில உறுப்பினர்கள் கூறினர்.

ஆனால், ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே போன்றவர்கள் தாம் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் பிரேரணையை ஒப்படைத்துவிட்டு பிறகு ஆதரவைத் திரட்டுவோம் என்று விடாப்பிடியாக நின்றனர்.

மஹிந்தானந்தவோ ஒரு படி மேலே சென்று பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ரணிலுக்கு எதிரான குழுக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் சுதந்திரக் கட்சிக்குள்ளும் இருக்கின்ற தைரியத்தில்தான் மஹிந்தானந்த, இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஐக்கிய தேசியக்கட்சியிக்குள் 26 பேர் கட்சியின் மறுசீரமைப்பைக் கோருகின்றனர். வாக்கெடுப்புக்கு முன் மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐ.தே.கட்சிக்குள் ரணிலுடன் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் ஆறு பேர் ரணிலுக்கு எதிராக வாக்களிப்பது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்களாம். மஹிந்தவின் ஆட்களை சந்தித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளனராம்.

இந்த விவகாரம் கட்சிக்குள் கசிந்துள்ளதால், யார் அந்த ஆறு பேர் என்று தேடத் தொடங்கியுள்ளனராம்.

அவர்களைக் கண்டுபிடித்து பிரதமர் மீது அவர்கள் வைத்திருக்கும் அதிருப்தியை இல்லாது செய்து, பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.

Comments