தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

🕔 March 5, 2018

– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் –

மைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது கடந்த திங்கள்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  கடந்த சனிக்கிழமையன்று அம்பாறை நகருக்கு அழைத்து வந்து, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை காண்பிப்பதற்காக மு.கா. தலைவர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் சனிக்கிழமை பிரதமரோ, மு.கா. தலைவரோ அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவில்லை.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று ஒலுவில் பிரதேசத்துக்கு பிரமருடன் மு.கா. தலைவர் விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பான கலந்துரையாடலொன்றினை ஒலுவிலில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் சுற்றுலா விடுதியில் நடத்தியிருந்தனர்.

ஆயினும், இந்த கலந்துரையாடலை எடுத்து அம்பாறைக்கு பிரதமர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் அங்கு செல்லவில்லை.

இதனால், பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதியமைச்சர் ஹரீஸ், விசனமடைந்த நிலையிலேயே, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இனவாதத் தாக்குதல் நடைபெற்ற அம்பாறை நகருக்கு பிரமர் வருகை செல்லாமை பெரும் ஏமாற்றத்தையளிக்கிறது.

அம்பாறையிலுள்ள அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே பிரதமர் அம்பாறை செல்லவில்லை.

இதன் மூலம், பிரதமர் தைரியமற்ற ஒருவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதனால், பிரதமர் மீது முஸ்லிம் சமூகத்துக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது’ என்றார்.

எவ்வாறாயினும், அம்பாறையிலுள்ள அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாகவே, அம்பாறை நகருக்கு விஜயம் செய்வதை பிரதமர் தவிர்த்துக் கொள்வதாக சனிக்கிழமையன்றே ‘புதிது’ செய்தித்தளம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்?

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்