பறப்பதற்கு தகுதியற்ற ஹெலிகொப்டர், அஷ்ரப்புக்கு வழங்கப்பட்டது: விசாரணை அறிக்கையில் அம்பலம்

🕔 March 4, 2018

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பயணம் செய்தபோது, விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், பறப்பதற்கு தகுதியற்ற நிலையில் வழங்கப்பட்டதாக, அந்த விபத்து தொடர்பில் ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எல்.கே.ஜி. வீரசேக தலைமையிலான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், குறித்த அறிக்கையினை சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள நிலையிலேயே, மேற்கண்ட விடயம் அம்பலமாகியுள்ளது.

கல்முனைக்கு பணிக்கும் பொருட்டு, தனக்கு  ஹெலிகொப்டர் ஒன்றினை ஏற்பாடு செய்து தருமாறு, 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம்  திகதி பிற்பகல், அப்போதைய விமானப்படைத் தளபதியைத் தொடர்பு கொண்டு, அஷ்ரப் கோரியிருந்தார்.

இதனடிப்படையில் வழங்கப்பட்ட எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டரில், மறுநாள் 16ஆம் திகதி அஷ்ரப் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஊரகந்த எனும் பகுதியில் விபத்து நிகழ்ந்தது. இதில் அஷ்ரப் உட்பட 15 பேர் பலியாகினர்.

எவ்வாறாயினும், 15ஆம் திகதி வரை, அஷ்ரப் பயணம் செய்த ஹெலிகொப்டர் – பழுது பார்க்கப்பட்டுக் கொண்டிருந்ததாக, ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

விமாப்படைத் தளபதிக்கு பறக்கும் நிலையிலுள்ள விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் பற்றிய அறிக்கையொன்று ஒவ்வொரு நாளும் வழங்கப்படுவது வழமையாகும். எனவே, பறப்பதற்குத் தகுதியற்ற ஒரு ஹெலிகொப்டரை, அஷ்ரப்பின் பயணத்துக்காக விமானப்படைத் தளபதி வழங்கியிருக்க மாட்டார் என்றும், இந்த விடயத்தில் அப்போதைய விமானப்படைத்தளபதி பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் எனவும், அந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அஷ்ரப் பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு, குண்டு வெடிப்பு எதுவும் காரணமாக இருக்கவில்லை எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் அஷ்ரப்பின் மரணத்துக்கு யாரேனும் ஒருவர் அல்லது குழுவினர் காரணமாக இருக்கலாம் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும்,  குண்டு வெடிப்பினாலோ  அல்லது எந்தவொரு வெடிபொருளினாலோ அந்த விபத்து நேரிட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அரசாங்க பகுப்பாய்வாளர், சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் உதவியாளர்கள் – ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்தனர் என்றும் சம்பந்தப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், விமான பராமரிப்பு பணியாளர்களின் அலட்சியம் அல்லது புறக்கணிப்பு  இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், முன்னாள் நீதிபதி எல்.கே.ஜி. வீரசேக தலைமையிலான  விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்