அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

🕔 March 2, 2018

– ஏ.என்.எம்.  நவாஸ் –

ம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டமை, புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில் இடம் பெற்றது.

இந்த பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு, மேற்படி இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான தங்களது எதிர்ப்பினை அமைதியான முறையில் தெரிவித்தனர்.

ஒலுவில் ஜூம்ஆப் பள்ளிவாசலில் முன்றலில் இருந்து,  தபால் நிலையம் வரையில், பேராணியில் ஈடுபட்டோர் நடை பவனியாகச் சென்றனர்.

‘வணக்கஸ்தலங்களை உடைக்காதீர்கள் நாங்களும் உங்கள் சகோதரர்களே’, ‘நாங்களும் இலங்கைப் பிரஜைகளே எங்களது மதசுதந்திரத்தை பறிக்காதீர்கள்’. ‘குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்’.’எமது தாய்நாட்டில் எமக்கு பாதுகாப்பு இல்லையா’,’எம் நாட்டின் மிகப்பெரிய ஊடகங்களே எம் சகோதரர்களுக்கு நடந்த அநீதியை வெளியுலகிற்குச் சொல்லுங்கள்’ போன்ற பதாதைகளை இதன்போது, பேரணியில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு, அம்பாறை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்