வென்றார் பசீர்; நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்தது, அஷ்ரப் மரண அறிக்கை

🕔 March 2, 2018

– மப்றூக் –

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பினுடைய மரணம் தொடர்பிலான விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை, இன்று வெள்ளிக்கிழமை தனக்கு கிடைக்கப்பெற்றதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குறித்த அறிக்கையினை வழங்குமாறு பசீர் சேகுதாவூத் விண்ணப்பித்திருந்தமைக்கு அமைவாக,  இன்று வெள்ளிக்கிழமை அந்த அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை, ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டப்ளியு.ஜே.எஸ். கருணாரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்டு, தகவலறியும் ஆணைக் குழுவுக்கு கடந்த 27 ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திலோ, சுவடிகள் கூடத் திணைக்களத்திலோ இந்த அறிக்கை  இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்தினால் கேட்டுப் பெறப்பட்ட இந்த அறிக்கையானது, உறுதிப்படுத்தப்பட்டு முத்திரையிடப்பட்டிருந்தது.

மேலும், இவ்வறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவலறியும் ஆணைக்குழுவின் முத்திரையும் பதிக்கப்பட்ட நிலையிலேயே, விண்ணப்பதாரர் பசீர் சேகுதாவூத்துக்கு வழங்கப்பட்டது.

அஷ்ரஃப்பின் மரண அறிக்கையினை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக 27 ஆம் திகதியன்று நடந்த ஆணைக்குழுவின் அமர்விலே, சுவடிகள் கூடத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் இவ்வறிக்கையை – அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியிடுமாறு, தகவல் அறியும் ஆணைக்குழு கூறியிருந்தது. ஆயினும், இவ்வறிக்கை சுவடிக் கூட திணைக்களத்திடமிருந்து பெறப்பட்டதில்லை என்பதனால், அவர்களின் இணையத்தில் வெளியிட முடியாது எனக் கூறி, கூடத்தின் பணிப்பாளர் அவ் வேண்டுகோளை நிராகரித்தார்.

இந்த நிலையில் மேற்படி அறிக்கையினை ஆராயுமாறு – தனது சட்டத்தரணிகளிடம் அதனை ஒப்படைத்துள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்  பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான மேற்படி அறிக்கையினை தனக்கு வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி செயலகத்திடம்  பசீர் சேகுதாவூத் கோரியிருந்த போதும், அந்த அறிக்கை தம்மிடம் இல்லை என்று, ஜனாதிபதி செயலகத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு பசீர் மேன்முறையீடு செய்தார். அதன் பின்னர், சுவடிகள் கூடத் திணைக்களத்திடம் அந்த  அறிக்கை கோரப்பட்டது. ஆனால், அவர்களிடமும் அந்த அறிக்கை முழுமையாக இல்லை எனக் கூறப்பட்டது.

இதனையடுத்தே, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடமிருந்து அந்த அறிக்கை பெறப்பட்டு, விண்ணப்பதாரருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்