அரச ஊழியர்களுக்கு ஜும்ஆ நேரம் மறுப்பு; முறைப்பாட்டினை அடுத்து, அமைச்சர் றிசாட் நடவடிக்கை

🕔 February 21, 2018

 

ரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றவென வழங்கப்பட்டுள்ள விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டுமென, அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த அமைச்சின் செயலாளரை வேண்டியுள்ளார்.

அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XIIஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உபபிரிவின் மீளமைக்கப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம், இந்த சலுகையினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிகிழமைகளில், தமது மதக் கடமைகளை அனுஷ்டிக்கும் வகையில் 12.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை வழங்கப்பட்ட விஷேட விடுமுறைக்கு அனுமதியளிப்பதற்கு சில அதிகாரிகள் மறுப்புத் தெரிவிப்பதாக முறையிடப்பட்டுள்ளது.

எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விஷேட சலுகைக்கு இடமளித்து, மதக் கடமைகளை சீராக நிறைவேற்றுவதற்காக அதிகாரிகளுக்கு மீண்டும் சுற்றுநிருபம் தொடர்பில் அறிவுறுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் முஸ்லிம் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை நேரத்தில் தமது கடமையை ஒழுங்காக நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும், அரச அதிகாரிகள் இதற்கு அனுமதி மறுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் முஸ்லிம் அரச  ஊழியர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே, அமைச்சர் இந்தக் கடிதத்தை அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ளார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஜும்ஆத் தொழுகை மிகவும் கட்டாயக் கடமையாகும். எனவே, அவர்களின் மதக் கடமைகளை அனுஷ்டிக்கும் வகையில் அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு ஏற்கனவே வழங்கிய சலுகையை சில அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர். வேறு சில அதிகாரிகள் இந்த விடயத்தில் கடும் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். ஆகையால், முஸ்லிம் அரச ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனியார் துறையினரும் முஸ்லிம்களின் சமய வழிப்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த விசேட சலுகையை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் கோரியுள்ளார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்