மஹிந்தவை சந்திக்க நேரம் கேட்டார் ஹக்கீம்; பசீரை அழைத்துப் பேசினார் மஹிந்த: ‘தங்க’ தலைவனின் திருகுதாளங்கள்

🕔 February 12, 2018

லங்கை அரசியலின் கதாநாயகனாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊ ஹக்கீம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, தொலை பேசியுள்ளார்.

இச்செய்தி என்னை 2010 ஆம் ஆண்டு மஹிந்த அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்ட போது இடம் பெற்ற அரசியல் விளையாட்டை மனக்கண் முன்னே நினைவலைகளாகக் கொணர்ந்து நிறுத்துகிறது.

எம்.பி.களை அழைத்த மஹிந்த

அன்று மு. காங்கிரசின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த ராஜபக்ஷ குழுவாக அழைத்து, தனது அரசாங்கத்துடுன் இணைந்து கொள்ளுமாறு கோரினார். அந்தக் குழுவில் நான், ஹஸனலி மற்றும் அஸ்லம் ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

மஹிந்தவை சந்தித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள்;  “ஹக்கீம் அல்லது பஷீர் வராமல் நாங்கள் மட்டும் இணைந்தோமானால் ஹக்கீமும் பஷீரும் சேர்ந்து எங்களைக் காலி பண்ணிவிடுவார்கள். எனவே அவர்கள் இருவரையும் சேர்த்துப் பேசுங்கள்” என்று மஹிந்தவிடம் கூறினர். இதற்கு அவர்; “ஹக்கீம் எனக்கு வேண்டாம், அவரை என்னால் நம்ப முடியாது” என்று கூறினார். பின்னர், “பஷீரை எடுக்கலாம்” என்று மஹிந்த கூறியுள்ளார்.

இதற்கு அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்; “ஹக்கீமை விட்டுப் பிரித்து பஷீரை எடுத்தால் நாங்கள் உங்களோடு சேரத் தயார். பஷீர் இல்லாமல் ஹக்கீமால் இயங்க முடியாது” என்று கூறியுள்ளனர்.

எனக்கான அழைப்பு

இந்த கலந்துரையாடலுக்கு அமைவாக மஹிந்த என்னை அழைத்துப் பேசினார்.

“நான் இணைவதாக இருந்தால் கட்சியாகவே இணைவேன்” என்று மஹிந்தவிடம் உறுதியாகச் சொன்னேன். அதற்கு; “ஹக்கீமை நம்ப முடியாது, அவர் ரணிலின் ஆள்.  2007 ஆம் ஆண்டில் நடந்தது போல், ஒரு வரவு –  செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சிக்கு ஹக்கீம் மாறிவிடுவார். அவரை நம்பமுடியாது” என்று மஹிந்த என்னிடம் கூறினார்.

அத்தோடு, ”நீங்கள் கட்சியைக் கைப்பற்றுவதற்கும், உங்களைத் தலைவராக்குவதற்கும் நான் உதவி செய்கிறேன்” என்றும், “உங்களை கெபினட் அமைச்சராக நியமிக்கிறேன்” என்றும், “மற்றவர்களுக்குப் பிரதி அமைச்சுப் பதவிகளைத் தருகிறேன்” என்றும் மஹிந்த கூறினார்.

அதற்கு; “ஹக்கீம் இல்லாமல் நான் வரமாட்டேன். உங்களுக்கு நாடாளுமன்றில் வாக்குகள்தானே தேவை? கட்சியாக வந்தோமானால் எட்டு வாக்குகள் தேறும். குழுவாக வந்தால் ஐந்துதானே கிடைக்கும்” எனக் கூறி, “கட்சியில்லாமல் வரமுடியாது” என உறுதியாகக் கூறினேன்.

இவ்வளவோடு அந்த உரையாடல் முடிவுக்கு வந்தது.

பயந்து போன ஹக்கீம்

தனது கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.பி.களோடு மஹிந்த பேசுவதை அறிந்துகொண்ட ஹக்கீம், மஹிந்தவின் அன்றைய தரகரான சஜின் வாஸ் குணவர்த்தனவுடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதியைச் சந்திக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஒரு நாள், கண்டி ஜனாதிபதி மாளிகையில் மஹிந்த ஓய்விலிருந்த போது என்னுடன் கைத்தொலை பேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். எனது தொடர்பு கிடைக்காமையால், எனது கொழும்பு வீட்டுத் தொலைபேசிக்கு அவரது மெய்ப்பாதுகாவலர் மூலமாகத் தொடர்பு கொண்டு, ஜனாதிபதியின் நேரடிக் கைத் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து அவசரமாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டேன்.

நான் உடனடியாக ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டேன். அவ்வேளை அவர்; “ஒயாகே நாயகதுமா மாவ ஹம்பவெண்ட ஓணே கியல கியணவா ஹம்பவெண்டத ” (உங்களின் தலைவர் என்னை சந்திக் வேண்டுமென்று கேட்கிறார். சந்திக்கவா) என்று என்னைக் கேட்டார். அதற்கு நான்; “சந்தியுங்கள் சேர். நீங்கள் இருவரும் உடன்பாடு காணுங்கள். நாம் கட்சியாக இணைவோம்” என்று கூறினேன்.

இதன் பின்னர், சஜின் வாஸுடன் சென்று கண்டியில் மஹித்தவைச் சந்தித்த ஹக்கீம், அரசாங்கத்தில் இணையும் முடிவை எடுத்தார். இந்த சஜின் வாஸ்தான், இறுதிவரை ஹக்கீமுக்கும் மஹிவுக்கும் இடைத் தரகராகச் செயற்பட்டவர். 2015 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலின் போதும், மஹிந்தவிடமிருந்து ஹக்கீமுக்கு முதல்கட்ட பணப் பரிமாற்றத்தைச் செய்தவரும் இவர்தான்.

நீ பாதி, நான் பாதி

மஹிந்த அரசாங்கத்துடன் இரண்டாவது முறையாக மு.காங்கிரஸ் இணைந்து கொண்ட போது, ஹக்கீம் தனக்கு மட்டும் கெபினட் அமைச்சையும் எனக்கு மட்டும் பிரதி அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார். மற்ற எம்.பி.கள் எவருக்கும் பிரதி அமைச்சுக்களைக் கொடுக்கக் கூடாது என்ற உடன்பாட்டையும் மஹிந்தவிடம் செய்துகொண்டார். அவருக்கு நீதியமைச்சர் பதவியும், எனக்கு உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சர் பதவியும் கிடைத்தன.

அமைச்சர்களாக நாங்கம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது, ஹக்கீமிடம்; “உங்களுக்கு நீதியில் பாதி, எனக்கு பாதியில் நீதி” என்று கூறினேன். இதனை அங்கு கேட்டுக் கொண்டிருத்த புலவலர் ஹாஷிம் உமர், எப்போது என்னைச் சந்தித்தாலும் ‘பாதி’ என்றே அழைப்பார்.

நான் கெபினட் அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்ததால், எனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சுப் பதவியை ‘பாதி’ என்றும், நிதி அமைச்சிலிருந்து சட்ட மா அதிபர் திணைக்களம் பிடுங்கப்பட்டதால் ‘நீதியில் பாதி’ என்றும் சொன்னேன்.

Comments