வேட்பாளர் இக்பால் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; யானைச் சின்ன வேட்பாளருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

🕔 February 8, 2018

– அஹமட் –

க்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் எஸ்.எம். இக்பால் எனும் வேட்பாளர் மீது, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் யு.கே. ஆதம்லெப்பை என்பவரும் அவரின் அடியாட்களும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் அட்டாளைச்சேனை 07ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வேட்பாளர் இக்பால் பாதிக்கப்பட்டமையினை அடுத்து, அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தாக்குதலுக்குள்ளான வேட்பாளர் இக்பால், தான் போட்டியிடும் வட்டாரத்துக்குட்பட்ட ரஹ்மானியாபாத் எனும் 07ஆம் பிரிவில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த – யானைச் சின்ன வேட்பாளர் யு.கே. ஆதம்லெப்பையும் அவரின் அடியாட்களும், இக்பாலையும் அவருடன் சென்றவர்களையும் தூஷண வார்த்தைகளில் திட்டியதோடு, முச்சக்கர வண்டியினால் மோதித் தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸாரிடம் இக்பால் முறையிட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இக்பால் போட்டியிடும் பெரிய பள்ளி வட்டாரத்திலேயே, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த யு.கே. ஆதம்லெப்பை என்பவரும் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், மு.காங்கிரசினரும் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் இக்பாலை தாக்கியதாகக் கூறப்படும் வேட்பாளர் ஆதம்லெப்பை  என்பவர், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயாகமகேயுடன் நெருங்கி உறவினைக் கொண்டவராவார்.

வேட்பாளர் இக்பால் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான அமைப்பாளராகப் பதவி வகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இன்று வியாழக்கிழமை நண்பகலளவில் வேட்பாளர் இக்பால் – வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியதாகக் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்