300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம்

🕔 January 4, 2018

– க. கிஷாந்தன் –

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும்காயங்களுக்குள்ளாகிய சம்பவம் லிந்துலை பெயார்வெல் பகுதியில்நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில், மேற்படி வேன் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பிட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ருவான்வெல்ல பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வேனில் சாரதியோடு இரண்டு யுவதிகள் பயணித்தனர். சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இரண்டு யுவதிகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு காயம்பட்ட 23, 18 வயதுடைய யுவதிகள் இருவரும் நுவரெலியா கந்தபளை மற்றும் தெரணியகல பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில், வேன் சாரதியை லிந்துலை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Comments