வெலிகம பிரதேச சபைக்கான மு.கா.வின் வேட்புமனு நிராகரிப்பு; நீள்கிறது பட்டியல்

🕔 December 21, 2017

வெலிகம பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த வேட்புமனுவில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவம் இல்லாமை காரணமாகவே, அது – நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பெற்ற முகவர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காமை காரணமாகவும், அந்தச் சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட முடியாததொரு நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த மூன்று சபைகளுக்கும் அதிகாரம் பெற்ற முகவரை, மு.கா. நியமிக்காமையினால், அந்தக் கட்சியின் செயலாளரே கட்டுப்பணத்தை நேரடியாகச் செலுத்த வேண்டியேற்பட்டது.

ஆயினும் கட்டுப்பணம் செலுத்தும் இறுதித் தினமான நேற்று புதன்கிழமை, கொழும்பிலிருந்து மு.கா. செயலாளர் ஹெலிகொப்டரில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவிருந்ததாகவும், வானிலை சீரற்றுக் காணப்பட்டமையினால், அவரின் வருகை தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மு.கா. சார்பில்  போட்டியிடும் பொருட்டு, மூன்று சபைகளுக்கும் சுயேட்சைக் குழுக்கள் பணம் செலுத்தியிருந்தன.

ஏற்கனவே, 93 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதும், ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான மு.காங்கிரசின் வேட்புமனு உள்ளிட்ட மேலும் சில வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்