சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்தார் சிராஸ் மீராசாஹிப்; பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றினார்

🕔 December 21, 2017

– அஹமட் –

ல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது பிறந்த ஊரான சாய்ந்தமருதுக்கு பாரிய துரோகம் செய்து விட்டதாக, அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதோடு, அது தொடர்பான உணர்வுகளை சமூக ஊடகங்களிலும் பதிவு செய்து வருகின்றனர்.

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு,  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் களமிறக்கியுள்ள சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிப்பதென சாய்ந்தமருதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் விகிதாசார வேட்பாளர் பட்டியலினூடாக கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சிராஸ் மீராசாஹிப் களமிறங்கியுள்ளார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளதோடு, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினையும் பள்ளிவாசல் களமிறக்கியுள்ளது.

இந்த நிலையில், சாய்ந்தமருது பள்ளிவாசல் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, ஒருபோதும் செயற்பட மாட்டேன் என்று வாக்குறுதியளித்திருந்த சிராஸ் மீராசாஹிப், தற்போது கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்கியுள்ளார்.

சிராஸின் இந்த நடவடிக்கையானது, சாய்ந்தமருதுக்கு செய்த மிகப்பெரும் துரோகம் என்று, அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

மேலும், சிராஸ் மீராசாஹிபை விமர்சித்து, சமூக ஊடகங்களில் கருத்துக்களையும் அவர்கள் பதிவிட்டும் வருகின்றனர்.

இதேவேளை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக தான் நடந்து கொள்ள போவதில்லை என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் சாய்ந்தமருதைச் சொந்த ஊராகக் கொண்டவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல், தீர்மானமொன்றினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சாய்ந்தமருதில் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்கப் போவதில்லை என்றும் ஜெமீல் தீர்மானமொன்றினை வெளியிட்டிருந்தார்.

அந்த தீர்மானத்தை எழுத்து மூலம் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கும் ஜெமீல் அனுப்பினார்.

இந்த தீர்மானத்தையும் மீறியே, மக்கள் காங்கிரசின் வேட்புமனுவில் சிராஸ் மீராசாஹிப் தனது பெயரைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்