சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம்

🕔 December 17, 2017

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்துக்காக பணியாற்றுவதில் பின்னடித்து வருவதாகவும், தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்துக்கு சார்பானவராக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் விமர்சனம் வெளியிடப்படுகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் முக்கிய பதவியினை வகிக்கும் சிராஸ் மீராசாஹிப், அமைச்சர் றிசாத் பதியுதீனின் அமைச்சின் கீழுள்ள – லங்கா அசோக்லேலன்ட் நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.

அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும்,  பசீர் சேகுதாவூத் மற்றும் ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் பெயரில் மயில் சின்னம் சார்பாக, இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், மயில் சின்னத்தில் இம்முறை போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வெற்றிக்கு உழைக்குமாறு, சிராஸ் மீராசாஹிபுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை அறிவுறுத்தியிருந்தது.

ஆயினும், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலின் போது, எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தீர்மானித்ததோடு, சுயேட்சை அணியினையும் களமிறக்க தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், தனது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்கு, தான் எதிரானவனல்ல என்று காட்டுவதற்காக, மயில் சின்னத்துக்கு அரசியல் செய்வதில் சிராஸ் பின்னடித்து வருவதாக அறியக்கிடைக்கிறது.

ஊரையும் பகைத்து விடக் கூடாது, கட்சி சார்பாக அனுபவிக்கும் பதவிகளையும் விட்டு விடக்கூடாது என, சிராஸ் எடுத்திருக்கும் இந்த தீர்மானமானது அவரின் பச்சோந்தித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதாக விடயமறிந்தோர் கூறுகின்றனர்.

கட்சிக்கு தலையையும், ஊருக்கு வாலையும் காட்டும் சிராஸ் மீராசாஹிப்பின் இந்த அரசியலானது, ஒரே நேரத்தில் இரண்டு தோணிகளில் கால் வைத்துப் பயணிப்பதற்கு ஒப்பானது எனவும் விமர்சிக்கப்படுகிறது.

ஏற்கனவே, மு.காங்கிரசுடன் இணையும் பொருட்டு சிராஸ் மீராசாஹிப், சில முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம். ஜெமீலை, அமைச்சர் றிசாட் முன்னிலைப்படுத்தி வருவதாக, நீண்ட காலமாக சிராஸ் மீராசாஹிப் விசனம் தெரிவித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிராஸ் மீராசாஹிப்பும், ஏ.எம். ஜெமீலும் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்