வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு

🕔 December 11, 2017

மைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்’ கொள்கைப் பிரகடனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கோடு, பின்வரும் கொள்கைச் செயற்பாடுகளை முன்னிறுத்தி ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ எனும் பெயரில் இயங்க உடன்படுவதாக, இதன்போது அமைச்சர் றிசாட் மற்றும் ஹசனி ஆகியோர் தெரிவித்தனர்.

தமது பொது நோக்கினை அடைந்து கொள்வதற்காக, எதிர்கால தேர்தல் செயற்பாடுகளிலும் சமூகத்துக்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு, அவர்கள் உறுதிப் பிரகடனம் செய்தனர்.

கொள்கைப் பிரகடனத்தின் முழு விபரம் வருமாறு;

01) இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் இறைமையைப் பாதுகாப்பதற்கும் ஐக்கிய இலங்கைக்குள் இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கும் சகல இன மக்களோடும் இணைந்து முன்னோடிகளாக செயற்படுதல்.

02) சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் நாட்டின் அரச கரும மொழிகளாக தொடர்ந்தும் பேணப்படுவதோடு, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அவரது சொந்த மொழியில் சகல கருமங்களையும் ஆற்றுவதை உறுதிப்படுத்த செயற்படுதல்.

03) இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் இனங்களைப் போல முஸ்லிம்களும் ஒரு தனியான தேசியம் என்பதோடு அவர்களுடைய சுயநிர்ணத்தையும் உறுதிப்படுத்த செயற்படல்.

04) வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகவே இருத்தல் வேண்டும் என்பதுடன் கிழக்கு மாகாணத்தை வேறு எந்தவொரு மாகாணத்துடனும் முழுமையாகவோ, பகுதியாகவோ, நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ இணைக்கக் கூடாது. அத்தோடு 1960 முதற்கொண்டு திட்டமிட்டு கிழக்கு மாகாணத்தோடு இணைக்கப்பட்ட பிரதேசங்களை கிழக்கு மாகாணத்திலிருந்து நீக்கிவிடுவதற்காக செயற்படுதல்.

05) அதிகாரப் பகிர்வு என்பது மாகாண சபைகளோடு மட்டுப்படுத்தப்படாமல், உள்ளுராட்சி சபைகளும் அதிகார வலுவுள்ளதாக மாற்றப்படுவதுடன், அதிகார அலகின் ஆள்புலத்திற்கு உட்பட்ட எந்தவொரு சிறுபான்மை இனத்திற்கும் எதிரான அத்துமீறலை தடுக்கக் கூடிய பொறிமுறையொன்றை தாபிக்க செயற்படல்.

06) நாட்டில் காணப்படுகின்ற நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை தொடர்ந்தும் பேணப்படுவதோடு, நேரடியாக மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் பொறிமுறை மாற்றங்களுக்குட்படாதிருப்பதற்காக செயற்படல்.

07)தற்போது நடைமுறையிலுள்ள பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்ந்தும் பேணப்படுவதோடு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படும் முயற்சிகளுக்கு எதிராக செயற்படுவதோடு, அண்மைக்காலத்தில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்களை நிவர்த்திக்க பாடுபடல்.

08) நாட்டின் சகல மதப் பிரிவினரினதும் சுதந்திரமான மதவழிபாட்டுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படுவதோடு, மத வழிபாடுகளில் ஏற்படுத்தப்படும் தடைகளுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க வலுவான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்தி செயற்படுதல்.

09) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீள மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன், முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக செயற்படுவதோடு, பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த செயற்படுதல்.

10)அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது மாவட்ட ரீதியாக இன விகிதாசாரத்தை பேணும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளை திருத்தம் செய்வதுடன், அபிவிருத்திச் செயற்பாடுகளில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சமத்துவம் பேணப்படுவதை உறுதிசெய்ய பாடுபடல்.

11) நாட்டின் நிர்வாக செயற்பாடுகளில் மொழி ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் சமூகத்தவர் பெரும்பான்மையாக வாழ்கின்ற கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியும், குறித்த மூன்று தொகுதிகளில் வாழ்கின்ற மக்களின் விகிதாசாரத்திற்கு தேவையான காணி நிலத்தினைக் கொண்டதுமான நாட்டின் இருபத்தாறாவது நிர்வாக மாவட்டத்தினை தாபிக்க செயற்படுதல்.

12) அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிடங்கலாக நாட்டின் சகல மட்டங்களிலும் காணப்படும் உயர் பதவிகளில் இன விகிதாசாரம் பேணப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்தி செயற்படுதல்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்