காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

🕔 November 18, 2017

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனமையினை அடுத்து, மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு விரைந்தார்.

அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும், தடைகளையும் பொருட்படுத்தாது, தனது பாதுகாப்பையும் கருத்திற்கெடுக்காது அதிகாலை 1.15 மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தார்.

வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்த பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வியாபரத்தலங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள்  மற்றும் குடியிருப்புக்கள் ஆகியவற்றைப் பார்வையிட்ட அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுடனும் உரையாடினார்.

இனவாதிகள் கலவரத்தைத் தூண்டும் வகையில் திட்டமிட்டு, இவ்வாறன அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும், எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு இரையாகாமல் பொறுமை காக்குமாறும், அந்தப் பிரதேச மக்களிடம் அமைச்சர் வேண்டிக்கொண்டார். அச்சத்தினால் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருந்த அப்பாவி மக்களையும் அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசரத் தொடர்பை மேற்கொண்ட அமைச்சர் ரிஷாட், நிலைமை மோசமடைந்து வருவதை எடுத்துக் கூறியதுடன், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ராணுவததினரை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும், உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். அதற்கமைய ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் ராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பிரதமருடன் தொடர்புகொள்வதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் அழகக்கோன் மற்றும் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன ஆகியோருடன் தொடர்புகொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டியிருந்தார்.   

காலி பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர், ஜிந்தோட்டை, விதானகொட, குருந்துவத்த, மகாசபுகல, எலபட, எம்பிட்டிய போன்ற பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

மேலும், இந்த நாசகார செயல்கள் திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு அங்குள்ள மதகுரு ஒருவரும், மதஸ்தலம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த மதகுருவால் வெளிமாவட்டங்களிலுள்ள ஆட்கள் வரவழைக்கப்பட்டு இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இதன் போது அமைச்சர் பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பௌசுல் நியாஸ் ஆகியோரும் அங்கு சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமது பங்களிப்புக்களை நல்கி இருந்தனர்.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட சூத்திரதாரிகள் அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் இன்று சனிக்கிழமை காலை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்தனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்