கல்முனையில் கடையடைப்பு பேராட்டத்துக்கு அழைப்பு: உச்சமடைகிறது உள்ளுராட்சி பிரச்சினை

🕔 October 31, 2017

– முன்ஸிப் அஹமட் –

ல்முனை பிரதேசத்தில் நாளை புதன் கிழமையும், நாளை மறுநாளும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், இதற்கான அழைப்பினை விடுத்துள்ளது.

கல்முனை மாநகரசபையை நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரித்து, முன்னர் கல்முனை பட்டிண சபையாக இருந்த பிரதேசத்தை – கல்முனை மாநகர சபையாகப் பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்த கடையடைப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை பிரித்துத் தருமாறு கோரி, சாய்ந்தமரு மக்கள் நேற்று தொடக்கம், மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கடையடைப்புப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, கல்முனை பிரதேசத்தில் – நாளையும், நாளை மறுநாளும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்; “கல்முனையை நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரிப்பதற்கு தான் உடன்பாடு என்றும், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும், கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிப்பதற்கு, ஒருபோதும் – தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும், நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்