சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு

🕔 October 29, 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை குறித்த கல்லூரியை லாபமீட்டாத நிறுவனமாக, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சைட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, சைட்டம் கல்லூரியை கலைத்து விடுவதற்கான சிபாரிசினை செய்திருந்தது.

மேலும், டொக்டர் நெவில் பெணான்டோ போதனா வைத்தியசாலையும், நெவில் பெணான்டோ குடும்பத்தினரும் சைட்டம் கல்லூரியில் எந்தவித உரிமையினையும் கோர முடியாது எனவும் மேற்படி ஜனாதிபதி குழு சிபாரிசு செய்துள்ளது.

அதேவேளை, சைட்டம் மருத்துவக் கல்லூரியின் சொத்துக்கள், பொறுப்புகள் ஆகியவையும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் புதிய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக சைட்டம் விவகாரம் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தினை முன்னிறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரலப்பினரும், அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையிலேயே, சைட்டம் மருத்துவ கல்லூரியை கலைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்