வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து இப்போதைக்கு பேச முடியாது; நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்

🕔 October 19, 2017

மிழ் அரசியல்வாதிகளிடமும் சில தமிழ் அதிகாரிகளிடமும் முஸ்லிம் விரோதப் போக்கு இருப்பதால், வடக்கு  – கிழக்கு இணைப்பு பற்றி இப்போதைக்கு பேச முடியாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணப் பிரமுகர்கள் குழுவொன்றுடனான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“முஸ்லிம் கட்சியொன்று தற்போது வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது. கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கருத்துக்களை தெரிவிக்க முடியாது. இது குறித்து மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. 

 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காக 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தோடு வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்த அடிப்படையில் 1988ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபை இயங்கத் தொடங்கியது.

2008 ஆம் ஆண்டுவரை இணைந்திருந்த இந்த வட கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் முஸ்லிம் சிங்கள மக்கள் திருப்தியடைவில்லை. இந்த சபையினால் வழங்கப்பட்ட நியமனங்கள் அபிவிருத்திகள் என்பவற்றில் இந்த இரண்டு இனத்தினருக்கும் அநீதிகள் பல இழைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மற்றும்  சிங்கள மக்களுக்கு கூடுதல் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு என்ற பெயரோடு பல அபிவிருத்தித் திட்டங்கள் அக்காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. நெக்கோர்ட், நெக்டெப், நேஹ்ர்ப் போன்ற பெயர் கொண்டு இத்திட்டங்கள் அழைக்கப்பட்டன. இத்திட்டங்களின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர்களாக முஸ்லிம் சிங்கள இனத்தவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே தெரியாமலே சில புறக்கணிப்புகள் நடந்துள்ளன.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடமும் சில தமிழ் அதிகாரிகளிடமும் முஸ்லிம் விரோதப் போக்கு இப்போது வெளிப்படையாக உள்ளது.

ஒரு வலயக் கல்வி அலுவலகத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் என ஐந்து சிரேஸ்ட அதிகாரிகள் இருக்க வேண்டும். கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் இந்த தரத்தில் மூன்று பேர் மட்டுமே கடமை புரிந்தனர். இவர்களில் இருவர் எவ்விதப் பதில் உத்தியோகத்தர்களும் இன்றி இடமாற்றப் பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தண்டாயுதபாணி கல்வி அமைச்சராக இருந்த போதுதான் இந்த இடமாற்றம் நடந்தது.

ஐந்து சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டிய இந்த அலுவலகத்தில் இன்று ஒரேயொரு உத்தியோகத்தருடன் இந்த வலயக் கல்வி அலுவலக நிர்வாகம் நடைபெறுகின்றது. கிண்ணியா முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட கல்வி வலயம் என்பதால்தான் அமைச்சர் தண்டாயுதபாணி, பதிலாள் இன்றிய இந்த இடமாற்றத்தை செய்தார்.

அதேபோல திருகோணமலை நகரசபையில் முஸ்லிம் உத்தியோகத்தர் ஒருவர் செயலாளராகக் கடமை புரியவும் அரசியல் ரீதியான எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டதால் இப்போது அங்கு முஸ்லிம் உத்தியோகத்தர் கடமையில் இல்லை.

கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் அண்மையில் பகிரங்கமாக பேசியிருந்தார். சில ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்திருந்தது.

திருகோணமலை மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பாக  வெளியிடப்பட்ட திட்டத்தில் கன்னியாவில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளினதும் சில தமிழ் அதிகாரிகளினதும் பாரபட்ச செயற்பாடுகளுக்கு இவை சில உதாரணங்கள்.

கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மை அளவில் இருக்கும் போதே இந்த நிலை என்றால் வடக்கு கிழக்கு இணையும் போது முஸ்லிம்கள் சிறுபான்மையாக மாறி விடுவர். இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் என்ன செய்வார்கள் என்று சிந்திக்கும் போது, பெரும் அச்ச நிலை ஏற்படுகின்றது.

எனவே தமிழ் அரசியல்வாதிகளிடமும்  தமிழ் அதிகாரிகளிடமும் முதலில் மனநிலை மாற்றம் வேண்டும். அவர்களிடம் முஸ்லிம் விரோதப் போக்கு இருக்கும் வரை வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச முடியாது. அதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் யாரும் எந்தவித ஆதரவும் தெரிவிக்க முடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்