சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு

🕔 October 4, 2017

மஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், அதனைப் பூதாகரமாகச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி கொள்ளச் செய்யக் கூடாது என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சருமான கே. துரைராஜ சிங்கம் தெரிவித்துள்ளார்.

வந்தாறுமூலையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்;

“இந்த நாட்டில் தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள், எமது கனவை நனவாக்கச் செய்து கொண்டிருக்கின்றன.

தமக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக 70 வருடங்களாக தமிழ் மக்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட எல்லா அரசியல் யாப்புகளிலும் தமிழ் மக்களின் விருப்புகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. ஆனால் புதிய அரசியலமைப்பு முழுமையான நாடாளுமன்றத்தாலும் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாகச் சொன்னால், தமிழ் மக்களின் பங்களிப்போடு இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமஷ்டிக்கான விடயங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. சமஷ்டி என்கிற பெயர் நமக்கு வேண்டாம். ஆனால், சமஷ்டிக்குரிய விடயங்களை அதற்குள் நாம் பொதியச் செய்திருக்கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்