கொல்லன் தெருவில் கொசுவுக்கென்ன வேலை; ஹாபிஸ் போரம் அமைப்பின் காப்பாளராக ஹக்கீம்: அங்கத்தவர்கள் விசனம்

🕔 September 26, 2017

– முன்ஸிப் அஹமட் –

‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்புக்கான காப்பாளராக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, அந்த அமைப்பின் நிருவாகத்துக்குத் தெரியாமல் நியமித்தமை தொடர்பில் அவ்வமைப்புக்குள் பாரிய அதிருப்தி நிலவுவதாகத் தெரியவருகிறது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஹாபிஸ்கள் இணைந்து, ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.

இந்த அமைப்புக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதோடு, ‘ஹாபிஸ் போரம்’ அமைப்புக்கென நிருவாகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்  தனது தனிப்பட்ட விருப்பத்துக்கிணங்கவும் தான்தோன்றித்தனமாகவும், அவருடைய கட்சியின் தலைவரான ரஊப் ஹக்கீமை,’கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ அமைப்பின் காப்பாளராக்கியுள்ளார்.

ஹாபிஸ் நசீரின் இந்த செயற்பாடானது, ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ அமைப்புக்குள் பாரிய விசனங்களையும், அதிருப்திகளையும் உருவாக்கியுள்ளது.

ஹாபிஸ்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரு அமைப்புக்கு, காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமாயின் ஹாபிஸ் ஒருவரை நியமிப்பதுதான் பொருத்தமாகும் என்பதுதான், ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ அமைப்பு உறுப்பினர்களின் வாதமாகும்.

அதன்படி பார்த்தால், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – ஹாபிஸ் அமைப்பொன்றுக்கு காப்பாளராக இருக்க தகுதியற்றவராவார்.

மேலும், கிழக்கு மாகாண அமைப்பொன்றின் காப்பாளராக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை ஏன் நியமிக்கக் கூடாது என்கிற கேள்விகளும் உள்ளன.

எது எவ்வாறாயினும், ரஊப் ஹக்கீமை ஹாபிஸ் நசீர் காக்காய் பிடிப்பதற்காக, ‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ அமைப்பின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளாமல், மேற்படி நடவடிக்கையினை ஹாபிஸ் நசீர் மேற்கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் அந்த அமைப்பு உறுப்பினர்கள் அநேகரின் கருத்தாக உள்ளது.

‘கிழக்கு மாகாண ஹாபிஸ் போரம்’ அமைப்பின் காப்பாளராக ஹக்கீமை ஹாபிஸ் நசீர் நியமித்தமையினை அடுத்து, அந்த அமைப்பிலிருந்து பலர் ஒதுங்கத் தொடங்கியுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மு.காங்கிரசின் பிரதித் தலைவராகப் பதவி வகிக்கின்றார் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்