நம்பிக்கை

🕔 September 19, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு மீளவும் நம்பிக்கையொன்றை ஏற்படுத்தியிருக்கிறது.

பரிந்துரைப்பு  

கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக் காலமும்  அடுத்த மாதம் முதலாம் திகதி முடிவுக்கு வருகின்றன.

இதையடுத்து, இந்த மூன்று சபைகளுக்குமான தேர்தல்கள் உடனடியாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடையில் 20ஆவது திருத்தம் வந்ததால், குறித்த மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள், இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிக்கும் நிலை காணப்பட்டது.

இந்தநிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதாயின், அதற்காக நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதோடு, சர்வஜன வாக்கெடுப்பொன்றிலும் வெற்றிபெற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 20ஆவது திருத்தம் தொடர்பில், 16 பக்கங்களில் அமைந்த, பரிந்துரையொன்றை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், 20ஆவது திருத்தமானது, அரசமைப்பின் மூன்றாவது உறுப்புரையை அப்பட்டமாக மீறியிருப்பதாக, உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

அரசமைப்பின் மூன்றாவது உறுப்புரையானது, மக்களின் இறைமை பற்றி விவரிக்கிறது. ‘இலங்கைக் குடியரசில், இறைமை மக்களுக்குரியதாகவும், பராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும்.  இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்’ என, மூன்றாவது உறுப்புரை கூறுகிறது. இங்கு பராதீனம் என்பதை, ‘கைமாற்றம் செய்தல்’ என்று, இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.

இறைமை  

மாகாண சபையொன்றின் பதவிக் காலம் ஐந்து வருடங்களைக் கொண்டது. ‘மாகாண சபையொன்று முன்னரே கலைக்கப்பட்டாலொழிய, அதன் முதலாவது கூட்டத்துக்கென நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து, ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு தொடர்ந்திருத்தல் வேண்டும் என்பதுடன், சொல்லப்பட்ட ஐந்து ஆண்டு காலப்பகுதி முடிவடைதல், சபையின் கலைப்பொன்றாகச் செயற்படுதலும் வேண்டும்’ என்று, அரசமைப்பின் உறுப்புரை 154(உ) கூறுகிறது.

இதன்படி, மாகாண சபைத் தேர்தல்களில் வாக்களித்த ஒவ்வொரு நபரும், ஐந்து ஆண்டுகள் செயற்படுவதற்கு மட்டுமே, அந்தந்த மாகாண சபைகளுக்கு ஆணை வழங்கி, வாக்களித்துள்ளனர் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இவ்வாறானதொரு நிலையில்தான், 20ஆவது திருத்தத்தின் மூலமாக கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கானதொரு முயற்சியை அரசாங்கம் எடுத்தது.

இதனூடாக, ஐந்து ஆண்டுகளுக்கான பதவிக் காலத்தை மட்டுமே மாகாண சபைகளுக்கு, தமது வாக்குரிமைக்கு ஊடாக வழங்கிய மக்களின் ஆணையைக் கையகப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்தது.

ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. காரணம், மக்களின் இறைமையாகிய வாக்குரிமை பராதீனப்படுத்த முடியாதது என்பதனாலாகும்.

தெரிவுகள்   

இந்த நிலையில், 20ஆவது திருத்தத்தைக் கைவிடுவதில்லை என்று அரசாங்கம் தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாயின், இரண்டு தெரிவுகள் அரசாங்கத்தின் முன்னால் உள்ளன.

ஒன்று: 20ஆவது திருத்தத்தில் வேறு ஏதாவது மாற்றங்களைச் செய்து, மீண்டும் உச்ச நீதிமன்றின் பரிந்துரைக்காக அனுப்பி வைப்பது.

மற்றையது: 20ஆவது திருத்தத்துக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்துவதாகும். ஆனாலும், 20ஆவது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்து, மீண்டும் உச்ச நீதிமன்றுக்கு அனுப்பி வைப்பதில்லை என்று ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளனர் என, செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேலும், கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவடைவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டும்தான் உள்ளன. இதற்கிடையில் 20ஆவது சட்டமூலத்தை திருத்தி, உச்ச நீதிமன்றுக்கு அனுப்பி, அதன் பரிந்துரைகளைப் பெறுவதற்கு காலம் போதாது. மறுபுறம், 20ஆவது திருத்தத்துக்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதை விடவும், நேரடியாக மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் நடத்துவது மேலானதாகும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாகவும் உள்ளது.

எனவே, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலொன்றுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதியும் தனது கட்சிப் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தற்போதைய நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உடனடியாக நடப்பதென்பது, ஆட்சியிலிருப்பவர்களை விடவும், எதிரணியினருக்கே சந்தோசமான விடயமாக உள்ளது.

கிழக்குத் தேர்தல்  

எதிர்பார்க்கப்படுவது போல், உடனடியாகத் தேர்தல்கள் நடத்தப்படுமாயின், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், இம்முறை மிகவும் களைகட்டும். அதிலும் முஸ்லிம் அரசியல் அரங்கில் நிச்சயம் ‘அனல்’ பறக்கும்.

‘முஸ்லிம் கூட்டணி’ கிழக்குத் தேர்தலில் குதிக்கும் என்று கூறப்படுவதால், போட்டி பலமாகவே இருக்கும். இந்த நிலையானது எதிர்பாராத பல முடிவுகளை ஏற்படுத்தக் கூடும்.

முஸ்லிம் காங்கிரஸின் முடிவு  

இந்தநிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, சம்மாந்துறைக்கு அழைத்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதுதான் கட்சிக்குச் சாதகமானது எனும் தோரணையில், மு.கா தலைவர் அங்கு தன்னுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினார் எனத் தெரிய வருகிறது.

ஆயினும், கணிசமானோர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலை இன்னும் அகற்றப்படாத சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது, தமது கட்சிக்கு நல்லதல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அறிய முடிகிறது.

எனவே, கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். இறுதியாக இன்னுமொரு முறை கூடி, இது தொடர்பில் பேசுவதென அங்கு முடிவு செய்யப்பட்டது.

முஸ்லிம் கூட்டமைப்பு  

இது இவ்வாறிருக்க, முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில், இதுவரை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ‘முஸ்லிம் காங்கிரஸின் தூய அணி’ என்று, தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள எம்.ரி. ஹசன்அலி,  பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தலைமையிலான அணியினர், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பில் நிறையத் தடவை பேசியுள்ளனர்.

அந்த வகையில், கூட்டமைப்பில் இணைவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முழுமையாக இணக்கம் தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது.

ஆனால், கூட்டமைப்பில் இணைந்து தேர்தலொன்றில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இதுவரையில் சாதகமான சமிக்ஞைகளை வெளியிடவில்லை என்று, கூட்டணி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம் கூட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில் ஹசன்அ​லி, பஷீர் தரப்பினருக்கும் அதாவுல்லாவுக்கும் இடையில், இதுவரையில் ஏராளமான சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைந்தே, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முகம் கொள்ள வேண்டுமென, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சி முக்கியஸ்தர்களில் கணிசமானோர் விரும்புகின்றனர்.

இதேவேளை, அவ்வாறானதொரு நிலை உருவானால், தேர்தலில் போட்டியிடுவதற்கு தமக்கான சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுமோ என்று, அதாவுல்லாவின் கட்சியிலுள்ள மற்றொரு தரப்பினர் அச்சப்படுகின்றனர்.

ஆனாலும், தனித்து அல்லது பெருந்தேசிய சிங்களக் கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிடுவதை விடவும், முஸ்லிம் கூட்டமைப்பாகப் போட்டியிடுவதுதான் அதாவுல்லாவுக்கு அதிகம் பலனைக் கொடுக்கும் என்பதுதான் பரவலான அபிப்பிராயமாக உள்ளது.

இருந்தபோதும், முஸ்லிம் கூட்டமைப்பினூடாக, கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  வலுவாகக் காலூன்றி விட்டால், அது தனது அரசியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம் என்று அதாவுல்லா யோசிப்பதாகவும் தெரிகிறது.

எது எவ்வாறாயினும், அதாவுல்லா இணையாமல் போனாலும், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.

அதாவுல்லாவின் நிலைவரம்  

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு கணிசமானதொரு வாக்கு வங்கி உள்ளதை மறுத்து விட முடியாது. அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்றில் அவருக்கு நல்லதொரு ஆதரவு உள்ளது.

அதனால்தான், அக்கரைப்பற்று மாநகர சபையையும் அக்கரைப்பற்று பிரதேச சபையையும் அவருடைய தேசிய காங்கிரஸ் கட்சியால் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது. ஆனாலும், இந்த வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு, கிழக்குத் தேர்தலில் அதாவுல்லாவால் தனித்துக் களமிறங்கி, எந்தளவு சாதிக்க முடியும் என்பது கேள்விக்குரியதாகும்.

கிழக்கு மாகாண சபைக்கான, கடந்த தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட அதாவுல்லாவின் கட்சிக்கு, மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஆனால், இம்முறை தனித்தோ, ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்தோ, அதாவுல்லாவின் கட்சி போட்டியிடுமாயின், அந்த மூன்று ஆசனங்களும் மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

புதிய தேர்தல்  

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மாகாண சபைகளுக்கான எதிர்வரும் தேர்தல், புதிய கலப்பு முறையில் நடைபெறும் என்று, ஜனாதிபதி கூறியிருக்கின்றார். இவ்வாறான தேர்தல் முறைமையானது இலங்கைக்கு புதியதாகும்.

எனவே, மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும், இங்கு கவனத்துக்குரியதாகும். விருப்பு வாக்குத் தேர்தல் முறைமைக்குப் பழக்கப்பட்ட மக்களை, புதிய தேர்தல் முறைமைக்குப் பழக்கியெடுக்க வேண்டிய தேவையொன்றும் உள்ளது.

எவ்வாறாயினும், விருப்பு வாக்கு முறைமையிலான தேர்தலொன்றில் வழங்கப்படும் வாக்குச் சீட்டை விடவும், தொகுதி வாரியான தேர்தலில் வழங்கப்படும் வாக்குச் சீட்டானது, வாக்களிப்பதற்கு இலகுவானதாகவே இருக்கும்.

பழம் இழந்தவர்கள்  

இதேவேளை, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில், கைகளை உயர்த்தியதன் மூலம், மக்கள் தமக்கு வழங்கிய ஆணைகளைத் தட்டிக் கழித்து, இன்னும் ஓர் ஆண்டு பதவியில் இருப்பதற்கு ஆசைப்பட்ட உறுப்பினர்களை நினைக்க பரிதாபமாக உள்ளது. அவர்களுக்குக் ‘கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை’. அவர்களுக்குக் கிடைக்கவிருந்த ‘பழங்கள்’ தட்டி விடப்பட்டிருப்பதனால் மிகவும் ஏமாற்றத்துடன்தான், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இவர்கள் சந்திக்க வேண்டியுள்ளனர்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் கைகளை உயர்த்தியவர்களை, மக்களில் பெரும்பாலானோர் துரோகிகளாவே பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. மறுபுறும் 20ஐ எதிர்த்தவர்களுக்கு கதாநாயக அந்தஸ்தும் கிடைத்துள்ளது.

இந்த நிலைமை,    கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வரையும் தொடருமானால், இப்போதைய மாகாண சபை உறுப்பினர்களில் பலர், தோற்றுப் போகும் நிலை ஏற்படும். ஆனால், மக்கள் எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடும் குணமுடையவர்கள் என்பதால், என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘எல்லாத் தேர்தல்களிலும் யாரோ ஒருவர் வென்று விடுகிறார்; மக்கள் தோற்று விடுகின்றனர்’ என்கிற பொன்மொழி இந்த இடத்தில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. எதிர்வரும் தேர்தலிலாவது மக்கள் வென்று விட வேண்டும் என்பதுதான் நமது பிரார்த்தனையாகும்.

நன்றி: தமிழ் மிரர் (19 செப்டம்பர் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்