சிறைச்சாலை வைத்தியசாலையில், நினைத்த மாதிரி போய் படுக்க முடியாது; ஆப்பு வைத்தார் சுவாமிநாதன்

🕔 September 9, 2017

சிறைக் கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின், மூன்று வைத்தியர்களின் ஒப்புதல்களைப் பெறவேண்டும் எனும் நிபந்தனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளாக உள்ள விசேட அரசியல்வாதிகளுக்கு தவறாகவும், உதவி செய்யும் வகையிலும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி வழங்கப்படுவதாக, பல்வேறு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாகவே, சிறைக்கைதி ஒருவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின் மூன்று வைத்தியர்களின் ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும் என்று, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலைக்குப் பொறுப்பான வைத்தியர், வெளி நோயாளர் பிரிவு வைத்தியர் மற்றும் நோயாளர் விடுதியின் வைத்தியர் ஆகியோர் மேற்படி ஒப்புதல்களை வழங்க வேண்டும்.

இதேவேளை, எதிர்காலத்தில் அமைச்சு விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கைதியின் நோய் பற்றிய அறிக்கை, அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளும், வேறு உயர் மட்டத்தவர்களும் சிறையிலடைக்கப்படும் போது, தேவையற்ற விதமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே, இந்த நடைமுறை உடனடியாக அமுலாக்கப்பட்டதாக, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னதாக, சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் மட்டும் ஒப்புதல் வழங்கினாலேயே, கைதி ஒருவரை – சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்