வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு

🕔 August 11, 2017

வெளி விவகார அமைச்சராக, விசேட அபிவிருத்தித் திட்ட அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமையினால், அவரின் இடத்துக்கு மாரப்பன நியமிக்கப்படவுள்ளார்.

மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட சட்டத்தரணியான திலக் மாரப்பன, முன்னாள் சட்ட மா அதிபராவார். இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சட்டம் மற்றும் ஒழுங்குத் துறை அமைச்சராக பதவி வகித்த மாரப்பன, எவன்காட் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக, தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, திலக் மாரப்பனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

இவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினாரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நவீன் திஸாநாயக்க மற்றும் சரத் அமுனுகம ஆகியோரின் பெயர்களும், வெளி விவகார அமைச்சர் பதவிக்காக பரிசீலிக்கப்பட்டிருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்