ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

🕔 August 4, 2017

மைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இல்லாது விட்டால், ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு – தாங்கள் ஆதரவளிக்கப் போவதாகவும், ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

ஓர் அமைச்சர் என்கிற வகையில் ரவி கருணாநாயக்கவின் செயற்பாடானது, முழு அரசாங்கத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு மேற்சொன்ன அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விட்டால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என்று, ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்

இதேவேளை, அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக, தனது இரண்டு கைகளையும் உயர்த்தப் போவதாக, விளையாட்டுத்துறை அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தருமான தயாசிறி ஜயசேகர வெளிப்படையாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிணை முறி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் முன்னிலையில், அமைச்சர் ரவி வழங்கிய வாக்கு மூலமானது, முழு அரசாங்கத்தையும் பார்த்துச் சிரிக்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், மேற்படி அமைச்சர்களின் கருத்துக்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும், எதிர்வரும் நாட்களில் இந்த விவகாரம் தொடர்பில் பிரமருடன் ஜனாதிபதி பேசவுள்ளார் என, ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு எதிராண விசாரணைகள் நிறைவுபெறும் வரையிலாவது, அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு, ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பிரதமரிடம் ஜனாதிபதி கலந்துரையாடிய பின்னரே, இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்