அச்சம்

🕔 August 3, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர்.

அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தாமல், நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலங்கள், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைகின்றன. இரண்டாம் திகதி, தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்வதற்கான தயார்படுத்தல்களில், தாம் ஈடுபட்டு வருவதாக, ஏற்கெனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களைப் பிற்போடும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தந்திரமாகக் காய்களை நகர்த்தியுள்ளார்.

“மாகாணசபைகளுக்கு, அடிக்கடி தேர்தல்களை நடத்துவது செலவு கூடிய விடயமாகும். எனவே, எல்லா மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்தினால் நல்லது” என்கிற மகுடத்தில், ஒரு யோசனையை பிரதமர் ரணில் விக்கிரசிங்க, அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அந்த யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்தது.

நாட்டில் மொத்தம், ஒன்பது மாகாண சபைகள் உள்ளன. அவற்றில் கிழக்கு உள்ளிட்ட மூன்று சபைகளின் பதவிக் காலம்தான், வரும் ஒக்டோபரில் நிறைவடைகின்றது. மிகுதி ஆறு சபைகளில், இறுதியாக மூன்று மாகாண சபைகள், 2019ஆம் ஆண்டில் கலையவுள்ளன. அதிலும், ஊவா மாகாண சபையின் ஆட்சிதான், 2019 இறுதியில் முடிவடையவுள்ளது.

ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், கடைசி மாகாணசபையின் பதவிக் காலம் நிறைவடையும் வரையில், அதாவது 2019ஆம் ஆண்டு இறுதி வரைக்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் தவிர்ப்பதாகும். அதற்காகத்தான், எல்லாத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது என்கிற யோசனை, பிரதமரால் முன்வைக்கப்பட்டது.

இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில், தேர்தலொன்றை நடத்தினால் தோற்று விடுவோம் என்கிற பயம், ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அந்தப் பயம் உண்மையானது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்களிடமுள்ள செல்வாக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு, அரசாங்கத்தின் இயலாமைகள் மற்றும் ஐ.தே.கட்சியினர் மீது சுமத்தப்பட்டு வரும், பாரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் போன்றவை காரணமாக, இப்போதைக்கு ஒரு தேர்தலில், ஆட்சியாளர்கள் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்புகள் குறித்து ஐயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தேர்தல்களை ஒத்தி வைக்கும் கைங்கரியத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒக்டோபரில் பதவிக் காலம் நிறைவடையும் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்தி வைக்கும் யோசனையை அமைச்சரவை அங்கிகரித்துள்ளபோதும், சட்ட ரீதியாக அதை நிறைவேற்றுவதில், பாரிய தடைகளை அரசாங்கம் தாண்ட வேண்டியுள்ளதாக அரசியல் விற்பன்னர்கள் கூறுகின்றனர்.

பதவிக் காலம் நிறைவடைந்தவுடன் சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டும். அதுதான் சட்டமாகும்.

ஆனால், மேற்படி சபைகளின் பதவிக் காலத்தை 2019ஆம் ஆண்டுவரை நீடிப்பதற்கான  ஆட்சியாளர்களின் திட்டம், நிறைவேறுவதற்குச் சில விடயங்களைச் செய்தாக வேண்டியுள்ளது.

மாகாணசபை ஒன்றின் பதவிக் காலத்தை நீடிப்பதாயின், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இப்போதைய நிலையில், நாடாளுமன்றில் ஐ.தே.கட்சிக்கு 106 உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு 95 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜே.வி.பி 06 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸும், ஈ.பி.டி.பியும் தலா ஓவ்வோர் உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு, 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும். மாகாண சபைகளின் தேர்தல்களைப் பிற்போடும் ரணிலின் யோசனைக்கு, ஐ.தே.க முழுமையான ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்த்தாலும், ஐ.ம.சு.கூட்டமைப்பும் அதற்குள் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியும் முழுமையான ஆதரவை நிச்சயமாக வழங்க மாட்டாது.

ஏற்கெனவே, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாகவுள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரியிடம் நேரடியாகவே கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, சுதந்திரக் கட்சியின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றபோது, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுமாறும், மஹிந்தவுடன் பேச்சு நடத்துமாறும் ஜனாதிபதி மைத்திரியிடம் வலியுறுத்தப்பட்டதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஊடகங்களுக்குப் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில், மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கான, ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு ஆதரவாக, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளைத் தூக்குவார்களா என்கிற சந்தேகம் உள்ளது.

சிலவேளை, அதற்குச் சுதந்திரக் கட்சியினரின் ஆதரவு கிடைக்காமல் போனால், மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்தி வைக்கும் திட்டத்துக்கு, மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாது போய்விடும்.

சிலவேளை, அந்தத் திட்டத்துக்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டாலும் கூட, ‘மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்பட்டால், அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்’ என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் அறிவித்துள்ளனர்.

தேர்தல்களை நடத்தாமல் காலம் தாழ்த்துவது, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும்’ என்று, ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டு, மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலேயே, உயர் நீதிமன்றம் மேற்படி கருத்தைத் தெரிவித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க மற்றும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி ஆகியவை அஞ்சிக் கொண்டு, தேர்தல்களைத் தள்ளிப்போடும் செயற்பாடுகளில் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிக்க, அந்தச் செயற்பாட்டுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவை முட்டுக் கொடுக்கும் கோதாவில் இறங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியென்றால், தேர்தல் ஒன்றைச் சந்திப்பதற்கான பயம், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்பட்டு விட்டதா என்கிற கேள்வி இங்கு எழுகிறதல்லவா? அந்தப் பயம் எழுவதற்குக் காரணங்கள் எவையாக இருக்கும்?
ஒக்டோபரில் கலையவுள்ள மூன்று மாகாண சபைகளில், கிழக்கு மாகாண சபையில் மட்டும்தான், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதிக்கங்கள் உள்ளன.

அந்த வகையில், கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்தை நீடிப்பதனூடாக, அந்தச் சபைக்கான தேர்தலைப் பிற்போடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்படுவது, அந்தக் கட்சிகளுக்கு எப்படிப் பார்த்தாலும் இலாபமானதாகும்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கூட்டமைப்பில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி உள்ளிட்டோர் தலைமையிலான ஓர் அணியுடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சி, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளிட்ட பல அணிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது நிகழுமாயின், முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, பலமானதோர் அரசியல் அணியாகவே இருக்கும். மேலும், கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்புக் களமிறங்கும் என்று, அதைச் சார்ந்தோர் கூறியும் வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், அந்தக் கூட்டமைப்புடன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து அது சற்றுச் சிந்திக்கவே செய்யும்.

எனவே, அவ்வாறானதொரு சூழ்நிலையில் இருந்து விலகிக் கொள்வதற்கான சந்தர்ப்பமொன்று கிடைக்குமாயின், அதை முஸ்லிம் காங்கிரஸ் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொள்ளும்.

இன்னொருபுறம், புதிய தேர்தலொன்றுக்கு முகம் கொடுப்பதாயின், அரசியல் கட்சிகளுக்கு பாரிய பணச் செலவு ஏற்படும். அவ்வாறான செலவுகள் ஏற்படாமல், தேர்தலின்றித் தொடர்ந்தும் ஆளும்தரப்பில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, அதை ஒருபோதும் தட்டிக் கழிக்க மாட்டாது.

எனவே, கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்தை நீடிப்பதனூடாக, அந்தச் சபைக்கான தேர்தலை ஒத்திப்போடும் திட்டத்துக்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருக்கும்.
இன்னொருபுறம், இப்போதைய காலகட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க கொண்டுவரும் யோசனையொன்றை எதிர்க்கும் அரசியலை, முஸ்லிம் காங்கிரஸும் த.தே.கூட்டமைப்பும் செய்யத் துணியாது என்பதும் இங்கு கவனிக்க வேண்டியதாகும்.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாணசபையின் ஆட்சி நீடிக்கப்படும்போது, ஓர் உள்ளகப் பிரச்சினை உருவாகக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, கிழக்கின் முதலமைச்சர் பதவியை த.தே.கூட்டமைப்புக் கோரலாம் என, இப்போதே பேச்சுகள் எழுகின்றன. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய சபையினுடைய அரைவாசிக் காலத்துக்கு நஜீப் ஏ. மஜீத் முதமைச்சராக இருந்தார்.

தற்போது முதலமைச்சராக, ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவி வகிக்கின்றார். இருவரும் முஸ்லிம்கள்.

எனவே, கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டால், அந்தக் காலத்துக்கான முதலமைச்சராக தமிழர் ஒருவரைத் தமது கட்சியிலிருந்து நியமிக்குமாறு, த.தே.கூட்டமைப்பு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதிக்குமா என்பதுதான் கேள்வியாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், தனது பதவியை இழந்து விட்டு, அதை விடவும் குறைவான தரத்தையுடைய ஓர் அமைச்சராகவோ உறுப்பினராகவோ, அதே சபையில் இருப்பாரா என்பது கேள்விக்குரியதாகும்.

முதலமைச்சர் பதவியை இழந்தவுடன், முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹாபிஸ் நஸீர் கோருவார் என்று, அந்தக் கட்சிக்குள்ளேயே பேச்சுகள் உள்ளன. ஹாபிஸ் நஸீருக்குத் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.கா வழங்குமாயின், அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாரிய பிரச்சினைகளைக் கட்சிக்குள் எதிர்கொள்ள நேரிடலாம்.

எனவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியில், தொடர்ந்தும் ஹாபிஸ் நஸீரை இருத்துவதற்குத்தான் முஸ்லிம் காங்கிரஸ் முயலும். அப்படிச் செய்த‌ற்கு, தலைவர் ஹக்கீம் கடுமையாகப் போராடலாம். ஆனால், த.தே.கூட்டமைப்பு, அதை ஒத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே தெரிகின்றன.

இவை ஒருபுறமிருக்க, அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது என்கிற திட்டத்தின் மூலம், மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கான அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு, இப்போதே பல திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

‘கபே’ மற்றும் ‘பஃப்ரல்’ அமைப்புகள் அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளன. “தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் ஒத்தி வைப்பது, ஜனநாயக மீறலாகும்” என்று ‘பஃப்ரல்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமையானது வருத்தத்துக்குரியதாகும்” என்று, ‘கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், விசனம் தெரிவித்திருக்கின்றார்.

எது எப்படியிருந்தாலும், இவற்றை ஆட்சியாளர்கள் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்க, தனது திட்டங்களை நிறைவேற்றுவதில் விடாப்பிடியானவர் என்பது, அரசியலரங்கில் அறியப்பட்ட விடயமாகும்.
எனவே, மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போடுவது என்கிற முடிவிலிருந்து அரசாங்கம் பின்னிற்கப் போவதில்லை.   உலகில் மிகப் பெரும் ஜனநாயக உரிமையாக, வாக்களிப்பு கருதப்படுகிறது.

தேர்தல் ஒன்றைத் திட்டமிட்டுத் தள்ளி வைப்பதென்பது, மக்களின் வாக்குரிமையை மறைமுகமாகத் தட்டிப் பறிக்கும் செயலாகும். நல்லாட்சி அரசாங்கம் அதைத்தான் செய்ய முயல்கிறது.

மென்மையான சர்வாதிகாரத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இதைப் பார்க்க முடியும்.

நன்றி: தமிழ் மிரர் (01 ஓகஸ்ட் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்